District News
சவுதி அரேபியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட குமரி மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது: அமைச்சர் ஜெயபால்–கலெக்டர் அஞ்சலி
சவுதி அரேபியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட குமரி மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது: அமைச்சர் ஜெயபால்–கலெக்டர் அஞ்சலி
17-06-2015
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே பொழிக்கரை மீனவ கிராமம் மண்டபத்தெருவை சேர்ந்தவர் மதிவளன் (வயது 45), மீனவர். இவர் சவுதி அரேபியாவில் மீன்பிடி வேலைக்கு சென்றார். அங்குள்ள ஜூபைல் துறைமுகத்தில் இருந்து சக மீனவர்களுடன் படகில் நடுக்கடலுக்கு சென்று மீன்பிடிப்பது வழக்கம். வழக்கம்போல இவர் உள்பட 8 மீனவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘சுபேல் சர்க்கி‘ என்ற நவீன விசைப்படகில் (லாஞ்ச்) கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அந்த விசைப்படகை மதிவளன் ஓட்டிச்சென்றார். நடுக்கடலில் இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மற்றொரு விசைப்படகு அவர்களை நோக்கி வந்தது. அதில் கடற்கொள்ளையர்கள் இருந்தனர்.
அவர்கள் குமரி மாவட்ட மீனவர்கள் இருந்த படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் மதிவளன் கழுத்தில் குண்டு பாய்ந்து இறந்தார்.
அவரது உடல் அங்கிருந்து கரைக்கு கொண்டு வரப்பட்டு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மீனவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் அரசை வலியுறுத்தினார்கள். அதன்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மதிவளன் உடலுக்கு அமைச்சர் ஜெயபால் அஞ்சலி செலுத்திய காட்சி. அருகில் கலெக்டர் சஜ்ஜன் சிங் |
இந்நிலையில் மீனவரின் உடல், விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. உடலை பெற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார், கூடுதல் இயக்குனர் ரங்கராஜன், குமரி மாவட்ட உதவி இயக்குனர்கள் ரூபர்ட்ஜோதி, நாபிராஜன், மீனவர் கூட்டுறவு இணைய மாநில தலைவர் சேவியர் மனோகரன் உள்ளிட்டோர் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மீனவரின் உடல், அவரது சொந்த ஊரான பொழிக்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்டது. உடல் வந்ததை அறிந்ததும் மீனவரின் குடும்பத்தினரும், உறவினர்களும் ஓடிவந்து கதறி அழுதனர். பின்னர் மீனவரின் உடல் அவரது வீட்டுமுன் அஞ்சலிக்காக இறக்கி வைக்கப்பட்டது. அப்போது குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இதற்கிடையே அமைச்சர் ஜெயபால், கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், வருவாய் கோட்டாட்சியர் மதியழகன் உள்ளிட்டோர் மீனவரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், இரா.பெர்னார்டு, ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கபிரியேல் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
0 Comments: