District News
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
28-06-2015
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் முதல் கேரள எல்லையில் உள்ள நீரோடிவரை சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடற்கரை பகுதி உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கடற்கரை கிராம மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடி தொழிலையே நம்பியுள்ளனர். இதனால் மீன்பிடிக்க செல்வதற்கு வசதியாக அவர்களில் பெரும்பாலானவர்களின் வீடுகள் கடற்கரையை ஒட்டியே அமைந்து உள்ளன.
கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும்போது மீனவர்கள் வீடுகளின் வாசல் வரை அலைகள் வந்து செல்லும். ஆனால் தேங்காப்பட்டணம், இரயுமன்துறை பகுதிகளில் கடல்சீற்றத்தால் இதற்கு முன்பு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல வீடுகள் கடல் அலையின் கோரவீச்சில் இடிந்து விழுந்துள்ளன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வழக்கமாக பருவமழை தொடக்கத்தில் கடல் சீற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதைப்போல நேற்று அதிகாலை குமரி மாவட்ட கடல்பகுதியில் சீதோஷ்ண நிலை வழக்கத்தைவிட மாறாக இருந்தது. நள்ளிரவில் இருந்தே இங்கு மழை பெய்துகொண்டே இருந்தது. சூறைக்காற்றும் பயங்கரமாக வீசியது.
இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால், பிள்ளைத்தோப்பு, கணபதிபுரம் அருகே உள்ள ஆயிரங்கால் பொழிமுகம், சைமன்காலனி, வாணியக்குடி, கோடிமுனை, குறும்பனை, கொட்டில்பாடு, குளச்சல், கடியப்பட்டணம், முட்டம், மிடாலம், தூத்தூர், பூத்துறை, சின்னத்துறை மற்றும் இரயுமன்துறை பகுதிகளில் கடல் சீற்றம் பயங்கரமாக இருந்தது. இதன் காரணமாக அலைகள் அதிக உயரத்துக்கு எழும்பி, ஆக்ரோஷமாக கரைக்கு வந்தன. அழிக்கால் பகுதியில் கடற்கரை மணற்பரப்பையும் தாண்டி வெளியே வந்த அலைகள் கடற்கரையோரம் இருந்த வீடுகளை சூழ்ந்தன. அழிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல்நீரால் சூழப்பட்டன. இதில் பல வீடுகளுக்குள்ளும் கடல்நீர் புகுந்தது. இதனால் அந்த வீட்டில் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கடல்நீரை வீட்டில் இருந்து வெளியேற்ற அவர்கள் கஷ்டப்பட்டனர்.
கடல் நீர் சூழ்ந்ததில் சில வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பூத்துறை பகுதியில் ஒரு வீட்டின் சுவர்களில் பெரிய அளவில் கீறல்கள் விழுந்தன. மேலும் தூத்தூர் பகுதியில் கிறிஸ்டோபர், விர்ஜின், ராபின், அக்கியாஸ், ஏசுதாசன் ஆகிய 5 பேரின் வீடுகள் இடிந்து விழுந்தன. முள்ளூர்துறையில் லாசர், விமல்ராஜ் ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன. இதன் அருகில் உள்ள ரேஷன்கடை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டதால் உடனடியாக அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்றினர்.
இதைப்போல தேங்காப்பட்டணம் துறைமுகம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியேறினார்கள். அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வள்ளங்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதில் பாறையில் மோதி உடைந்தன. அவை அரையந்தோப்பு பகுதியில் கரை ஒதுங்கின. மேலும் தேங்காப்பட்டணம் கடற்கரை சந்திப்பில் உள்ள பள்ளிவாசலுக்குள்ளும் கடல்நீர் புகுந்தது.
இந்நிலையில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், மீன்துறை உதவி இயக்குனர் ரூபர்ட்ஜோதி மற்றும் அதிகாரிகள் அழிக்கால் மற்றும் மண்டைக்காடுபுதூர் பகுதிக்கு விரைந்து சென்று கடல்சீற்ற பாதிப்புகளை பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகளை கேட்டறிந்தனர். அப்போது நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ.வும் உடன் சென்றார்.
0 Comments: