District News
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு இனிப்பு வழங்கினார்
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு இனிப்பு வழங்கினார்
27-06-2015
தமிழகத்தில் வருகிற 1–ம் தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொது மக்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தி இருந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போக்குவரத்து போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு வழிகாட்டும் விதத்தில் கடந்த 20–ம் தேதி முதலே போலீசார் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகிறார்கள். மேலும் போக்குவரத்து போலீசாரின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.
இன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கிய இப்பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், வடசேரி, மணிமேடை, அண்ணா பஸ் நிலையம், கோட்டார் வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றடைந்தது.
இந்த பேரணிக்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேரணி நடந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த பொதுமக்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அரசு அறிவித்த தேதிக்கு முன்பே அவர்கள் ஹெல்மெட் அணிந்ததற்காக அவர்களுக்கு இனிப்பும் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– குமரி மாவட்டத்தில் அரசு அறிவித்தபடி வருகிற 1–ம் தேதி முதல் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். போக்குவரத்து போலீசார் மாவட்டம் முழுவதும் இதனை கண்காணிப்பாளர்கள். ஹெல்மெட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments: