Other News
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம், காரைக்காலில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்சி மலை ஒட்டிய வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று (30 முதல் 40 கி.மீ வரை) மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
01-05-2020: தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 கி.மீ., முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும்.
02-05-2020: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும்.
04-05-2020: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி 45கி.மீ முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும்.
05-05-2020: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50கி.மீ முதல் 60 கி.மீ வரை வீசக்கூடும்.
மேலும் இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடனும் அவ்வப்போது மிக சீற்றத்துடனும் காணப்படும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சவெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும். இன்று தமிழகத்தில் மதுரையில் அதிகபட்சமாக 39.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments: