National News
ஒரே நாளில் 1,823 பேருக்கு கொரோனா தொற்று: இந்தியாவில் பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்தது
உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவது மட்டுமின்றி அனைத்து நாடுகளையும் பொருளாதார பாதிப்புக்கும் உள்ளாக்கி வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை எப்படியாவது சரிகட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
சில நாடுகள் தொழில் தொடங்க அனுமதி வழங்கி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்தியாவில் நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. தொடர்ந்து வைரஸ் தாக்கம் இருந்து வருவதால் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 31,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 33,610 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக 67 பேர் உயிரிழந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கையும் 1,075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8,373 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும், 24,162 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. அங்கு மட்டும் 9,915 பேரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும் அங்கு தனது கோரப்பிடியில் சிக்கிய 432 பேரை பலி கொண்டுவிட்டது. அடுத்தபடியாக அதிவேகமாக குஜராத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்திய கொரோனா 4,082 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன் 197 பேரை உயிரிழக்கவும் செய்துவிட்டது.
டெல்லியில் 3,439 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,560 பேரும், ராஜஸ்தானில் 2,556 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 161 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்து இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் 2,203 பேரையும், ஆந்திராவில் 1,403 பேரையும், தெலுங்கானாவில் 1,016 பேரையும், கர்நாடகாவில் 565 பேரையும் கொரோனா தாக்கி உள்ளது.
0 Comments: