District News
முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய தக்கலை சிறுமி
தக்கலையை சேர்ந்த சிறுமி ஒருவர், தான் சேமித்து வைத்து இருந்த ரூ.2 ஆயிரத்தை முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு டி.டி. எடுத்து அனுப்பினார். மக்களை காப்பாற்றுங்கள் என உருக்கமான கடிதமும் அனுப்பியுள்ளார்.
குமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தான் சேமித்த உண்டியல் பணத்தை முதல்- அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தக்கலை அருகே கேரளபுரம் கிருஷ்ணன்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் அமர்நாத். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மஞ்சு. இவர் நாகர்கோவிலில் அரசு வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் அதித்தி (வயது 6), நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறாள்.
அதித்தி தனக்கு பெற்றோர், உறவினர்கள் கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தாள். பிறந்த நாளன்று அந்த பணத்தின் மூலம் ஏழைகளுக்கு உணவு வாங்கி கொடுப்பாள். முதல்- அமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டுகோள் விடுத்ததை அறிந்த அதித்தி தனது பெற்றோரிடம் தான் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுப்போம் என்று கூறி இருக்கிறாள். அதற்கு அவளது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.
உடனே அதித்தி உண்டியலில் இருந்த பணத்தை எண்ணிய போது அதில் ரூ.2 ஆயிரம் இருந்தது. உடனே அதித்தி பெற்றோர் உதவியுடன் ரூ.2 ஆயிரத்துக்கு வங்கியில் டி.டி. யாக எடுத்து தமிழக முதல்- அமைச்சர் கொரோனா நிதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
அத்துடன் சிறுமி அதித்தி, தமிழக முதல்- அமைச்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், முதல்- அமைச்சர் தாத்தா, நான் ஏழைகளுக்கு சேமித்த பணத்தை உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் அதனை கொரோனாவுக்கு பயன்படுத்தி மக்களை காப்பாற்றுங்கள் என கைப்பட உருக்கமாக எழுதப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் சமூக நலன் கருதி, 6 வயது சிறுமி தனது சேமிப்பு பணத்தை முதல்- அமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளது அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments: