National News
கடும் நிதி நெருக்கடியால் விபரீத முடிவு: கேரள தொழிலதிபர் துபாயில் தற்கொலை “14-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்”
துபாயில் கடும் நிதி நெருக்கடியால் தவித்து வந்த கேரள தொழிலதிபர் அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மனந்தவாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜாய் அரக்கல். இவருக்கு செலின் என்ற மனைவியும், அருண் மற்றும் அஷ்லி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் துபாய்ஜுமைராபகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தனர்.
ஜாய் அரக்கல் கடந்த சில நாட்களாக கடும் நிதி நெருக்கடியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் சம்பவத்தன்று துபாயின் பிசினஸ் பே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது நண்பரின் வீட்டுக்கு சென்றார்.
ஜாய் அரக்கல் மன உளைச்சலுடன் இருந்ததால், அவரின் நண்பர் ஆறுதல் கூறினார். ஆனாலும் அதனை ஏற்காத அவர் அந்த குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை நண்பர் உள்பட அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் ஜாய் அரக்கல் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து துபாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், ஜாய் அரக்கல் கடும் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்தனர்.
ஜாய் அரக்கலின் உடலை தனி விமானத்தின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அவரின் குடும்பத்தினர் திட்டமிட்டனர். இது தொடர்பாக தடையில்லா சான்று பெறுவதற்காக இந்திய தூதரகத்தை அணுகியுள்ளனர்.
இது குறித்து இந்திய துணைத்தூதர் விபுல் கூறியதாவது:- துபாயில் உயிரிழந்த கேரள தொழிலதிபர் ஜாய் அரக்கலின் உடலை விமானத்தில் கொண்டு வர அனுமதிப்பதற்கான தடையில்லா சான்றிதழ் இந்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து புறப்படும் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அவரின் குடும்பத்தினர் துபாய் வருகிறார்கள். பின்னர் ஜாய் அரக்கலின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இருப்பினும் அமீரக வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் முறையான அனுமதி கிடைத்த பிறகுதான் அவரின் உடலை அதே விமானம் மூலம் கேரளாவுக்கு கொண்டு செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
உயிரிழந்த கேரள தொழிலதிபர் ஜாய் அரக்கல் அமீரகத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம், கப்பல் சேவை, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அமீரக வர்த்தகத்தில் கொடி கட்டி பறந்தார்.
இவ்வாறு பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதால் இவருக்கு கேரள அரசின் சிறந்த தொழிலதிபருக்கான விருதை அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் சமீபத்தில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments: