Surrounded Area
மண்டைக்காடுபுதூர் கடல் பகுதியில் படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பலி
குளச்சல் மாதா காலனியைச் சேர்ந்தவர் ரசலையன் (வயது 52). மீனவர். இவர் சொந்தமாக கட்டுமர படகு வைத்து மீன் பிடித் தொழில் செய்து வருகிறார்.
நேற்று இரவு 10 மணிக்கு இவரும், குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்த அருள்தாசன் (60), லியோன் நகரைச் சேர்ந்த பெஞ்சமின் (65) ஆகியோரும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
குளச்சல் அருகே உள்ள மண்டைக்காடுபுதூர் கடல் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கி அவர்கள் சென்ற படகு நிலைகுலைந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
படகில் இருந்த மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்தனர். அவர்கள் உயிர் தப்புவதற்காக கடுமையாக போராடினார்கள். அவர்களில் ரசலையன் மட்டும் நீந்தி கரைக்கு வந்தார். மற்ற 2 மீனவர்களும் நீரில் மூழ்கி மாயமானார்கள்.
கரைக்கு வந்த ரசலையன் படகு கவிழ்ந்த விவரத்தையும், 2 பேர் கடலில் மூழ்கிய விவரத்தையும் உறவினர்களிடம் தெரிவித்தார். இதுபற்றி குளச்சல் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், மீனவர்களும் படகு மூலம் கடலுக்கு சென்று மாயமான 2 மீனவர்களை தேடினர்.
இன்று காலை அந்த 2 மீனவர்களும் பிணமாக மீட்கப்பட்டனர். அருள்தாசன் உடல் குளச்சல் கடற்கரையிலும், பெஞ்சமின் உடல் சின்னவிளை கடற்கரையிலும் கரை ஒதுங்கின. அவர்களது உடல்களை கடலோர காவல் படை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் குளச்சல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
0 Comments: