
சுற்றுவட்டார செய்திகள்
மணவை செய்திகள்
மணவாளக்குறிச்சி பகுதியில் சினிமா சூட்டிங்
மணவாளக்குறிச்சி பகுதியில்
சினிமா சூட்டிங்
19-01-2013
மணவாளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக திரைப்படங்களின் சூட்டிங் நடைபெறுவது வழக்கமாகி விட்டது. இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அதிகம் தமிழ் திரைப்படங்களில் காட்டப்பட்ட இடம் முட்டம் பகுதியாக இருந்தது. பின்னர் வந்த திரைப்படங்களில் முட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பல சுற்றுலாதலங்கள் தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் நாகர்கோவில் உள்பட பல இடங்களில் “கடல்” திரைப்படம் சூட்டிங் நடத்தப்பட்டது. தொடர்ந்து மீனவ மக்களின் வாழக்கையை பிரதிபலிக்கும் திரைப்படமான தனுஷ் நடிக்கும் “மரியான்” என்ற திரைப்படம், மண்டைக்காடு, புதூர் மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் சூட்டிங் செய்யப்பட்டது. மேலும் பல மலையாள திரைப்படங்கள் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியகுளம், திருநயினார்குறிச்சி போன்ற இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் எடுக்கப்படுகிறது.
![]() |
தயாரிப்பாளர் சுதாகரன் (சிகப்பு சட்டை அணிந்திருப்பவர்) மற்றும் தயாரிப்பு மேற்பார்வையாளர்கள் |
தற்போது, மலையாள மொழியில் பல திரைப்படங்களை தயாரித்த சுதாகரன் திக்கண்டியல் என்பவரால் “தெக்கு தெக்கொரு தேசம்” (തെക്ക് തെക്കൊരു ദേശത്ത്) என்ற மலையாள திரைப்படம் மணவாளக்குறிச்சி பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சகிர் என்பவர் ஹிரோவாகவும், நிமிஷா என்பவர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இந்த படம் மணவாளக்குறிச்சி ஏலா பகுதி, வயக்கரை பாலம் பகுதி, திருநயினார்குறிச்சி, பெரியகுளம், வெள்ளிமலை உள்பட பல பகுதிகளில் நடக்கிறது. பெரும்பாலான பகுதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் எடுக்கப்படுகிறது.
![]() |
இயக்குநர் நந்து மற்றும் கேமராமேன் ஐயப்பன் |
மேலும் இந்த படத்தில் சலீம் குமார், கோபுகுமார் இந்திரன்ஸ், விஜயன் பி.நாயர், செம்பில் அசோகன், ஹரிசாந்த், பிரகாஷ், லெட்சுமி சர்மா, அம்பிகா மோகன், நிஷா சரத், காலப்பாணி லீலா, கோழிக்கோடு சாரதா உள்பட பல மலையாள நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
![]() |
குணசித்திர நடிகை கோழிக்கோடு சாரதா நடித்த காட்சி |
நந்து இயக்கத்தில், எம்.கே. ரவிவர்மா கதை வசனத்தில், பாப்பச்சன் தனுவச்சபுரம் மற்றும் ராஜேஷ் மணக்காடு ஆகியோரின் தயாரிப்பு மேற்பார்வையில் உருவாக்கப்படுகிறது. இசையை அருண் ராஜ் என்பவரும், ஒளிப்பதிவை ஐயப்பன் என்பவரும் செய்கின்றனர்.
![]() |
வீடு போன்ற செட்டிங்கை காணலாம் |
இந்த படத்தின் தொடக்கவிழா திருவனந்தபுரம் விஜிடி அரங்கில் இந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து முதல் கட்ட சூட்டிங் மணவாளக்குறிச்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. திரைப்பட சூட்டிங்கை மணவாளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் பெருமளவில் வந்து பார்த்து செல்கின்றனர்.
0 Comments: