
National News
வருகிற 15-ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு இலவச ‘ரோமிங்’ சலுகை
வருகிற 15-ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு இலவச ‘ரோமிங்’ சலுகை
04-06-2015
பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் இலவச ‘ரோமிங்’ சலுகை வழங்கப்படும் என மத்திய தொலைதொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, ஓராண்டை நிறைவு செய்துள்ளதையொட்டி, மத்திய தொலைதொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பி.எஸ்.என்.எல். நிறுவனம், 2004-ம் ஆண்டு, ரூ.10 ஆயிரம் கோடி லாபம் சம்பாதித்தது. 2014-ம் ஆண்டு, பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றபோது பி.எஸ்.என்.எல். ரூ.7 ஆயிரத்து 500 கோடி நஷ்டத்தில் இயங்கியது. எம்.டி.என்.எல். நிறுவனம், 2008-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து லாபத்தில் இயங்கி வந்தது. இப்போது நஷ்டத்தை சந்தித்து வருகிறது. (எம்.டி.என்.எல்., டெல்லி, மும்பையில் தொலைதொடர்பு சேவை வழங்குகிறது. நாட்டின் எஞ்சிய பகுதிகளில் பி.எஸ்.என்.எல். சேவை அளிக்கிறது).
வரும் 15-ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் இலவச ரோமிங் சலுகையை வழங்கும். (இதன் காரணமாக ஒரு மாநிலத்தில் இருந்து பிற மாநிலத்திற்கு செல்கிறபோது பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு செல்போனில் வருகிற இன்மிங் கால்ஸ் என்னும் உள்வரும் அழைப்புகளுக்கு கட்டணம் கிடையாது.)
இரு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் புத்துயிரூட்ட சாத்தியமாகக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இவை வெற்றி அளித்து வருகின்றன. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வருமானம், 2014-15 ஆண்டில் 2.1 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. செயல்படும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 47 லட்சமாக உயர்ந்துள்ளது.
அலைக்கற்றைகள் (பிற நிறுவனங்களுடன்) பகிர்தல், வர்த்தகக்கொள்கை ஆகியவை, இந்த மாதம் மந்திரிசபை முன் வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இருப்பினும் ரோமிங் சலுகை, ஓராண்டு காலத்திற்கு மட்டும்தான் என தகவல்கள் கூறுகின்றன.

0 Comments: