District News
நாகர்கோவிலில் 40 இடங்களில் சோதனை: ஹெல்மெட் அணியாதவர்கள் வாகனம், லைசென்சு பறிமுதல்
நாகர்கோவிலில் 40 இடங்களில் சோதனை: ஹெல்மெட் அணியாதவர்கள் வாகனம், லைசென்சு பறிமுதல்
01-07-2015
தமிழகம் முழுவதும் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்பை தடுக்க இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது.
இதன்படி, ஹெல்மெட் அணியாமல் செல்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும், அவ்வாறு செல்வோரின் வாகனம் மற்றும் லைசென்சு பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் லைசென்சை திரும்ப பெற வாகன ஓட்டிகள் ஐ.எஸ்.ஐ. முத்திரை பொறித்த ஹெல்மெட்டுகளை வாங்குவதோடு அதற்கான ரசீதை கோர்ட்டில் சமர்ப்பித்து லைசென்சு மற்றும் வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்த உத்தரவு இன்று முதல் அமுலுக்கு வந்தது.
குமரி மாவட்டத்தில் உள்ள ஹெல்மெட் விற்பனை செய்யும் கடைகளில் ஹெல்மெட் வாங்க கூட்டம் அலைமோதியது. பல கடைகளில் மாலை பொழுதிலேயே ஹெல்மெட் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து பல விற்பனையாளர்கள் ஹெல்மெட்டுகளை அதிக விலைக்கு விற்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.500–க்கு விற்கப்பட்ட ஹெல்மெட் நேற்று ரூ.1500 வரை விலை போனது. அப்படியும் பலரால் ஹெல்மெட் வாங்க முடியவில்லை.
இன்று காலையில் ஹெல்மெட் கிடைக்காத பலரும் அதனை அணியாமலேயே வாகனங்களில் சென்றனர். இவர்களை கண்காணித்து பிடிக்க மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் நகரில் மட்டும் சுசீந்திரம் ஆனை பாலம், கோட்டார், செட்டிக்குளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, டெரிக் சந்திப்பு, பார்வதிபுரம், வெட்டூர்ணி மடம், ஒழுகினசேரி, வடசேரி, மணிக்கூண்டு, அண்ணா பஸ் நிலையம், வேப்பமூடு உள்பட 40 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிலரது வாகனங்களையும் போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் அமர்ந்து சென்றவர்களும் பிடிக்கப்பட்டனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இதுபோல வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் தலைமையில் ஒரு குழுவினர் பீச் ரோடு சந்திப்பில் சோதனை நடத்தினர். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை பிடித்து அவர்களுக்கு அறிவுரை கூறினர். பின்னர் மீண்டும் இதுபோல சிக்கிக்கொண்டால் அவர்களின் வாகனமும், லைசென்சும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து அனுப்பினர்.
இதுபற்றி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம் கூறும்போது, இன்று மாலை முதல் வட்டார போக்குவரத்து துறையினரின் சோதனை தீவிரப்படுத்தப்படும். அவர்களின் ஆய்வில் சிக்குவோரின் வாகனங்கள் மற்றும் லைசென்சு பறிமுதல் செய்யப்படும் என்றார்.
நாகர்கோவில் நகரில் இன்று போலீசாரிடம் சிக்கிய பலரும் ஹெல்மெட் தட்டுப்பாடு காரணமாக வாங்க முடியவில்லை என்று காரணம் கூறினர்.
0 Comments: