District News
“ஹெல்மெட்” திருடும் கும்பல்: பொதுமக்களே உஷார்
“ஹெல்மெட்” திருடும் கும்பல்: பொதுமக்களே உஷார்
06-07-2015
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் அணிவது இந்த மாதம் 1-ம் தேதி முதல் அமுலுக்கு வந்தது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவரின் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து அனைவரும் ஹெல்மெட் வாங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ரூ.300, ரூ.400 விற்பனை செய்யப்பட்ட சாதாரண ஹெல்மெட்டுகள் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.1000 க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்தனர்.
ஹெல்மெட் விலையேற்றத்தை தொடர்ந்து பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஹெல்மெட் விற்பனையை கண்காணித்து வருகிறது. மேலும் ஹெல்மெட் வாங்கும் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிவதுடன், உடனேயே விற்று தீர்ந்து விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஹெல்மெட் திருடும் கும்பல் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உலா வருவதாக தெரிகிறது.
மணவாளக்குறிச்சி வடக்கன்பாகம் கூடல்விளை பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் பாலப்பள்ளம் பேரூராட்சியில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் எப்போதும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடியே அலுவலகம் சென்று வந்தார். இன்று காலையில் ஹெல்மெட்டை மோட்டார் சைக்கிளில் இணைத்து வைத்து விட்டு அலுவலகம் சென்றார். சிறிது நேரத்தில் வந்து பார்த்தபோது ஹெல்மெட் திருடு போனது தெரிந்தது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதிலேயே ஹெல்மெட் திருடப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு செல்லும் ஹெல்மெட்டுகள் கண்இமைக்கும் நேரத்தில் திருடப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே பொதுமக்களே எப்போதும் வாகனத்தை விட்டு இறங்கியவுடன், ஹெல்மெட்டை தங்களுடன் எடுத்து சென்று விடுங்கள். இல்லையென்றால் உங்கள் ஹெல்மெட் உங்களுக்கு இல்லை. திருடும் ஹெல்மெட்டுகள் மிகக்குறைந்த விலையில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
0 Comments: