District News
நாகர்கோவில் அமெரிக்க வெள்ளை மாளிகை நுழைவு வாயிலுடன் எந்திர மிருகங்களின் பொருட்காட்சி - பார்வையாளர்கள் வியப்பு
நாகர்கோவில் அமெரிக்க வெள்ளை மாளிகை நுழைவு வாயிலுடன் எந்திர மிருகங்களின் பொருட்காட்சி - பார்வையாளர்கள் வியப்பு
08-05-2014
நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி நிறுவனம் ஆண்டுதோறும் நாகர்கோவில் நகரில் பொழுதுபோக்கு பொருட்காட்சியை கோடையில் நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில், பிரமாண்டமான காட்சிகளை நுழைவு வாயிலில் அமைத்து காண்போரை அசத்துவது இந்த பொருட்காட்சியின் சிறப்பம்சமாகும்.
7–வது முறையாக இந்த ஆண்டு அந்நிறுவனம் புதுமையாய் நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நுழைவு வாயிலுடன் கூடிய பொருட்காட்சியை கடந்த மாதம் 20–ந் தேதி முதல் நடத்தி வருகிறது. நாகர்கோவில் நகரில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாத சூழ்நிலையில், கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் இந்த வெள்ளை மாளிகை பொருட்காட்சி அமைந்துள்ளது.
முதலில் கேரள மாநில கோவில் விழாக்களின்போது பயன்படுத்தப்படும் அலங்கரிக்கப்பட்ட யானைகளைப் போன்று 3 யானைகள் தும்பிக்கையையும், தலையையும் அசைத்து, அசைத்து நடப்பது போன்ற காட்சியும், அதன்மீது கேரள பாரம்பரிய உடை அணிந்த 9 பேர் நின்று கொண்டு முத்துக்குடை பிடித்திருப்பது போன்றும், சாமி ஊர்வலத்தின்போது சாமரம் வீசுவது போன்றும் இடம்பெற்றுள்ள காட்சியும் அமைந்துள்ளன. எந்திர யானைகள் மற்றும் மனிதர்களின் அசைவுக்கேற்றவாறு செண்டை மேள இசையும் ஒருங்கே அமைந்திருப்பது அனைவரையும் கவர்வதாக உள்ளன.
அதைத்தொடர்ந்து தலை மற்றும் உடலை அசைத்தவாறு நிற்கும் துள்ளிக்குதிக்கும் மான்கள், வயிற்றில் உள்ள பையில் குட்டியை சுமந்தவாறு அதற்கே உரிய குணாதிசய அசைவுகளுடன் நிற்கும் கங்காரு குட்டி, வயிற்றில் உள்ள குட்டி உள்ளே செல்வதும், வெளியே தலையை நீட்டுவதுமாக இருக்கும் காட்சி, அடர்ந்த காட்டுக்குள் வசிக்கும் மலைவாசி ஒருவரின் குடும்பத்தினர் வீட்டுக்கு வெளியே தோட்டம் போன்ற பகுதியில் அமர்ந்து இறைச்சி துண்டை அடுப்பில் வாட்டுவதுபோன்ற காட்சியும், கொரில்லா தனது இருகரங்களால் மேளம் கொட்டுவது போன்ற காட்சியும் இயல்பாக அமைந்துள்ளன.
குதிரை, ஒட்டகச் சிவிங்கி, கரடி, சிங்கம், காட்டு எருமை, வரிக்குதிரை, புலி, யானை, மரத்தில் நடனமாடும் அனகோண்டா பாம்பு போன்றவை பார்வையாளரை மிரட்டுகின்றன. அதற்கேற்றவாறு ஒவ்வொரு மிருகத்துக்கும் அந்தந்த மிருகங்கள் எழுப்புவதைப் போன்ற சத்தத்தை தனித்தனியாக ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்திருப்பது வித்தியாசமாக உள்ளது. இதற்கெல்லாம் மேலாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரையும் வடிவமைத்து நிறுத்தியுள்ளனர்.
0 Comments: