District News
ராஜாக்கமங்கலம் கடல் அலையில் சிக்கிய இளம்பெண்ணை தேடுவதில் சிக்கல்
ராஜாக்கமங்கலம் கடல் அலையில் சிக்கிய இளம்பெண்ணை தேடுவதில் சிக்கல்
30-06-2015
ராஜாக்கமங்கலம் அருகே முருங்காவிளையைச் சேர்ந்தவர் காந்திமதி. இவருடைய மகள் சங்கீதா (வயது 19). இவர் எறும்புக்காட்டில் உள்ள ஒரு தனியார் வலைக்கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சங்கீதா, அவரது உறவினர்களுடன் ராஜாக்கமங்கலம் கடற்கரைக்கு சென்றார்.
அப்போது சங்கீதா மற்றும் அவரது உறவினர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். கடலில் எழும்பிய ராட்சத அலை சங்கீதாவையும் மற்றும் அவரது உறவு பெண் ஒருவரையும் இழுத்துச் சென்றது. இதைப்பார்த்த மற்றவர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். சங்கீதாவை காப்பாற்ற முடியவில்லை. கடல் அலை அவரை உள்ளே இழுத்துச் சென்றது. உறவுப் பெண் மட்டும் மீட்கப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. அந்த பகுதி மீனவர்கள் கடலில் இறங்கி தேடினர். நீண்ட நேரம் தேடியும் சங்கீதா கிடைக்கவில்லை.
நேற்று 2–வது நாளாக தேடுதல் வேட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடலில் ராட்சத அலைகள் எழும்புகின்றன. கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் கடலில் இறங்கி தேட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேடுதல் வேட்டையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சங்கீதாவின் கதி என்ன? என்னவென்று தெரியாததால் கடற்கரையில் அவரது உறவினர்கள் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சங்கீதாவுக்கு ராதிகா, சாந்தி என்ற 2 சகோதரிகள் உள்ளனர்.
0 Comments: