District News
அரசு சேவைகளை பெற மின்னணு மையங்களை அணுகலாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்
அரசு சேவைகளை பெற மின்னணு மையங்களை அணுகலாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்
03-07-2015
குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பொது இ–சேவை மையத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:–
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. பொது இ–சேவை மையம் (மின்னணு மையம்) கடந்த பிப்ரவரி மாதம் முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டத்திலும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித்திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதிஉதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதிஉதவித் திட்டம், பட்டா மற்றும் சிட்டா, வில்லங்கம், தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்து கொள்வதற்கும், பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்காகவும், செல்போன் ரீசார்ஜ், டி.டி.எச். ரீசார்ஜ் ஆகிய மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சேவை மையம் இரண்டு கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுடன் செயல்படுகிறது. விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் பெறும் நாள் குறித்து குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படுகிறது. வருவாய்துறை சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுக்கு ரூ.50–ம், சமூகநலத்துறை சார்ந்த சான்றிதழ்களுக்கு ரூ.100–ம், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி சான்றிதழ்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான்கார்டு என்று அழைக்கப்படும் நிரந்தர கணக்கு எண் பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்காகவும், மின்சார கட்டணம் கட்டுவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு கேபிள் டிவி இ–சேவை மையத்தின் மூலம் கடந்த மாதம் 9–ம் தேதி அன்று முதல் பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ–சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். ஒப்புகைச் சீட்டு பதிவு எண்ணை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படும். ஏற்கனவே ஆதார் எண் கிடைக்கப் பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ரூ.30– கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதன் மூலம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை பொது சேவை மையங்கள் மூலம் நேர்த்தியாகவும், வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கமாகும். எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசு கேபிள் டிவி மூலம் செயல்பட்டு வரும் இ–சேவை மையத்தை அணுகி பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.
0 Comments: