
District News
கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சுற்றுலா பயணிகளை கவர ஹெலிகாப்டர் சர்வீஸ் – அதிகாரிகள் ஆய்வு
கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சுற்றுலா பயணிகளை கவர ஹெலிகாப்டர் சர்வீஸ் – அதிகாரிகள் ஆய்வு
23-12-2015
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள்.
கன்னியாகுமரியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியையும் மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் சுற்றுலாபயணிகள் பார்த்து ரசிக்கிறார்கள். முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போடுகிறார்கள். அதன் பிறகு பகவதிஅம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசிக்கிறார்கள். மேலும் கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், மியூசியம், வியூ டவர், கலங்கரை விளக்கம், மீன் காட்சி சாலை, சுனாமி நினைவு பூங்கா, நீர் விளையாட்டு உல்லாச பொழுதுபோக்கு பூங்கா, வட்டக்கோட்டை கடற்கரை போன்ற சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கிறார்கள்.
இங்கு வரும் சுற்றுலாபயணிகள் இந்த சுற்றுலாதலங்கள் அனைத்தையும் ஒரே நாளில் பார்த்து விட்டு ஊர் திரும்பி விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் குறைந்தது 2 அல்லது 3 நாட்கள் இங்கு தங்கியிருந்து சுற்றுலா தலங்களை பார்ப்பதற்கு வசதியாக பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்க மத்திய–மாநில அரசுகள் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த அடிப்படையில் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் வான்வழியாக குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களை பார்ப்பதற்கு வசதியாகவும் அவர்கள் விரைந்து வெளியூர்களுக்கு செல்ல வசதியாகவும் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் “ஹெலிகாப்டர்” சர்வீஸ் நடத்த சுற்றுலாதுறை பரிசீலனை செய்து வருகிறது.
இது குறித்து கன்னியாகுமரியில் ஏற்கனவே 2 கட்ட ஆய்வு பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள ஹெலிகாப்டர் தளங்களில் ஹெலிகாப்டர் வந்து இறங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகளும் ஆய்வுபணிகளை நடத்தி உள்ளனர்.
0 Comments: