
சுற்றுவட்டார செய்திகள்
முட்டத்தில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் படகில் அடிபட்டு சாவு
முட்டத்தில் இருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் படகில் அடிபட்டு சாவு
05-09-2015
மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் பெர்க்மான்ஸ் (வயது 45). மீனவர். இவரது மனைவி விஜயா. இவர் முட்டத்தை சேர்ந்தவர். பெர்க்மான்ஸ், திருமணத்திற்கு பிறகு மனைவியின் ஊரிலேயே தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 1–ம் தேதி இவர் அதே பகுதியை சேர்ந்த 10 பேருடன் சேர்ந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றார்.
அங்கு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது திடீரென ராட்சத அலை படகை தாக்கியது. இதில் படகு அங்குமிங்கும் தள்ளாடியது. அப்போது படகில் நின்றிருந்த பெர்க்மான்ஸ் எதிர்பாராதவிதமாக படகின் மரப்பிடியில் மோதினார். இதில் அவருக்கு பலத்த அடிப்பட்டது. காயங்களுடன் படகிலேயே சுருண்டு விழுந்த பெர்க்மான்ஸ் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார்.
இது பற்றி படகில் இருந்தவர்கள் கரையில் உள்ள அவரது உறவினர்களுக்கும், மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இது பற்றி அறிந்த கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் கிளிட்டஸ் மற்றும் தமிழக மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன் ஆகியோர் ஆழ்கடலுக்குள் இறந்த மீனவர் பெர்க்மான்ஸ் உடலை உடனடியாக கரைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து அவரது உடல் இன்று வேறொரு படகு மூலம் கரைக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இச்சம்பவம் பற்றி கடலோர பாதுகாப்புப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: