Headlines
Loading...
குளச்சல் நகரசபை துணை தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி

குளச்சல் நகரசபை துணை தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி

குளச்சல் நகரசபை துணை தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி
22-01-2015
குளச்சல் நகரசபை தலைவராக தி.மு.க.வை சேர்ந்த நசீர் உள்ளார். இங்கு துணை தலைவர் பதவியிலும் தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் ஜேசுராஜன் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் இறந்து போனார். எனவே குளச்சல் நகரசபையின் துணை தலைவர் பதவி காலியாக இருந்தது.

இதற்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி இங்கு துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. குளச்சல் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.க.–7, தி.மு.க.–8, பா.ஜனதா–2, ச.ம.க.–1, சுயேட்சைகள்–6 என உறுப்பினர்கள் இருந்தனர். இதில் தி.மு.க. உறுப்பினர் ஒருவர் இறந்து விட்டதால் கவுன்சிலர்கள் எண்ணிக்கை 23 ஆக இருந்தது. இவர்களில் இருந்து நகராட்சியின் துணை தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடந்தது.

அ.தி.மு.க. சார்பில் முகம்மது தாசிமும், தி.மு.க. சார்பில் லதா ராபினும் வேட்பாளராக போட்டியிட்டனர். ஓட்டுபதிவு முடிந்து ஓட்டுகள் எண்ணப்பட்டதில் அ.தி.மு.க. வேட்பாளர் முகம்மது தாசிம் 16 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. வேட்பாளர் லதா ராபின் 7 ஓட்டுகளே பெற்றிருந்தார். இதன்மூலம் குளச்சல் நகரசபையில் தி.மு.க. வசம் இருந்த துணைதலைவர் பதவி இடைத்தேர்தல் மூலம் அ.தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. கடந்த முறை தி.மு.க.வுக்கு வாக்களித்த சுயேட்சைகள் இம்முறை அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற வைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற முகம்மது தாசிமுக்கு குளச்சல் நகரசபை கமிஷனர் (பொறுப்பு) சுரேஷ் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். குளச்சல் நகரசபை துணை தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது என்ற தகவல் அறிந்ததும் அங்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் விரைந்து சென்று வெற்றி பெற்ற முகம்மது தாசிமுக்கு வாழ்த்து தெரிவித்தார். அங்கு கூடி நின்ற தொண்டர்கள் வெற்றியை கொண்டாடும் பொருட்டு நகரசபை முன்பு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் நகரசபை முன்பிருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட அவை தலைவர் சதாசிவம், துணை செயலாளர்கள் ராஜன், சலாம் மாணவரணி செயலாளர் மனோகரன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சேவியர் மனோகரன், குளச்சல் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆறுமுகராஜா, நகர செயலாளர்கள் அருள்தாஸ், சந்திரன், மற்றும் நிர்வாகிகள் ஜீன்ஸ், ஜஸ்டின், பெலிக்ஸ் ராஜன், எல்.ராஜன், ராஜாராம், ஆண்ட்ரூஸ், பிரேம்ஸ், தர்மராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: