Manavai News
மணவாளக்குறிச்சி பகுதியில் ஆபத்தான நிலையில் நிற்கும் மின்கம்பம்
மணவாளக்குறிச்சி பகுதியில் ஆபத்தான நிலையில் நிற்கும் மின்கம்பம்
11-10-2014
மணவாளக்குறிச்சி பாலம் அருகே உள்ள ரோட்டின் ஓரத்தில் உயர்ந்த அழுத்த மின்சாரத்தை சுமந்து செல்லும் மின்கம்பங்கள் உள்ளன., சாத்தான்விளையில் இருந்து மணவாளக்குறிச்சி பாலம் வரை உள்ள சாலை மிகவும் செங்குத்தான இறக்கமுள்ள சாலையாகும். இதனால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில் இந்த பகுதியில் ரோட்டின் ஓரத்தில் நின்ற ஒரு மின்கம்பத்தில் ஏதோ ஒரு வாகனம் மோதியதாக தெரிகிறது. இதனால் அந்த மின்கம்பம் ஒடிந்து விழும் நிலையில் கம்பிகள் தெரியும் வண்ணம் நிற்கிறது. இதனை சம்பந்தப்பட்ட துறையினர் மாற்றாமல் மின்கம்பத்தின் மேல் பகுதியில் கயிறு ஒன்றை கட்டி, அருகில் உள்ள மரத்தில் இழுத்து கட்டியுள்ளனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் நிற்கும் இந்த மின்கம்பத்தால், அந்த பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் பயந்தவாறே சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க, ஒடிந்து விழும் நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்றும்படி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
0 Comments: