சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவிகள் குளிப்பதை படமெடுத்த வாலிபர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவிகள் குளிப்பதை படமெடுத்த வாலிபர் மீது வழக்கு
11-10-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை உரப்பனவிளையை சேர்ந்த ஒருவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களது வீட்டின் பின்புறம் குளிக்கும் பகுதியில் சோப்பு டப்பா தொங்குவதை கண்ட மாணவிகள் அதை எடுத்து பார்த்தனர். அந்த சோப்பு டப்பாவுக்குள் ஒரு காமிரா செல்போன் இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த மாணவிகள் இதுகுறித்து தங்களது தந்தையிடம் கூறினர். அவர் அந்த செல்போனை மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கொடுத்து புகார் செய்தார். அந்த செல்போனில் மாணவிகளின் குளியல் காட்சி உள்பட சுமார் 1½ மணி நேரம் வீடியோ பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் செல்போனை பொருத்தியது யார்? என விசாரணை நடத்தினர்.
இதில் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற அசோக் என்பவர் தான் அந்த செல்போனை பொருத்தி எடுத்திருப்பதாக தெரிகிறது. எலக்ட்ரீசியனாக வேலை பார்க்கும் இளங்கோ கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிகளின் வீட்டையொட்டிய அவரது உறவினர் வீட்டுக்கு எலக்ட்ரிக் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது உறவினர் வீட்டின் பின்புறம் சென்ற இளங்கோவுக்கு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது..
அதன்படி நவீன செல்போனை சோப்பு டப்பாவுக்குள் மறைத்து வைத்து காமிராவை ‘ஆன்’ செய்து வைத்து மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்திருப்பதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவிகளின் தந்தை மணவாளக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இளங்கோ மீது இந்திய தண்டனை சட்டம் 354(சி) –வது (தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி ஆபாச படம் எடுத்தல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ், சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் விசாரணை நடத்தி தலைமறைவான இளங்கோவை தேடி வருகின்றனர்.
0 Comments: