
Manavai News
மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் தீவிபத்து ஒத்திகை பயிற்சி
மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் தீவிபத்து ஒத்திகை பயிற்சி
26-07-2014
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை சார்பில் அரசு அலுவலகங்கள், தனியார் கம்பெனிகள் மற்றும் பலமாடி கட்டிடங்களில் தீவிபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பது குறித்த ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலையில் நேற்று சிவில் பிரிவு கட்டிடத்திலும், அதன் அருகிலும் தீவிபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்ற ஒத்திகை பயிற்சி நடந்தது. அப்போது ஆலையில் பயிற்சி பெற்ற அதிகாரிகள், ஊழியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சி பெற்ற ஊழியர்கள் உடனடியாக தீ உபகரணங்களை உபயோகித்து தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டன. அவர்களால் முடியாத நிலையில் ஆலையில் உள்ள மற்ற ஊழியர்களை அழைக்க சைரன் ஒலி எழுப்பப்பட்டது.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக குளச்சல், கன்னியாகுமரி, கொல்லங்கோடு, தக்கலை, நாகர்கோவில் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள், அவசரகால மீட்பு ஊர்தி, நீர் தாங்கி வண்டி மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் அங்கு வந்தனர். அவர்களுடன் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியன், உதவி அலுவலர் சரவணபாபு மற்றும் 108ஆம்புலன்ஸ், தனியார் மருத்துவமனை ஆம்புலன், மணல் ஆலை ஆம்புலன்ஸ் மற்றும் நடுவூர்கரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணல் ஆலை ஊழியர்களின் தீ விபத்து ஒத்திகை பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி வழங்கி தீயை அணைத்தனர்.
இந்த ஒத்திகை பயிற்சி குறித்து தெரியாத மணவாளக்குறிச்சி பொதுமக்கள் சைரன் ஒலி கேட்டதும், உண்மையாகவே ஏதோ சம்பவம் நடந்துவிட்டதாக நினைத்து பரபரப்புடன் காணப்பட்டனர்.
0 Comments: