
Manavai News
மணவாளக்குறிச்சியில் பூத்துக் குலுங்கும் “செங்காந்தள் மலர்”
மணவாளக்குறிச்சியில் பூத்துக் குலுங்கும் “செங்காந்தள் மலர்”
19-07-2014
நமது தேசிய மலர் தாமரை மலரைப் போல் நமது தமிழக மாநில மலர் “செங்காந்தள்” மலராகும். மிக மிக அரிதாக காணக்கிடைக்கும் இம்மலர் அடர்த்தியான சிறு செடிகளுக்கு ஊடாக ஆற்றுப் படுகையிலும், வனங்களிலும் மட்டுமே வளரும் அரியவகை கொடி மலராகும்.
பண்டைய சங்க இலக்கியங்களில் மன்னர்குலப் பெண்கள் சூடும் அற்புத மலராக இதை படித்தறிய முடிகிறது. கிராமங்களில் இம்மலரை “கண்வலி” பூ என்றே அறிந்தவர்கள் கூறுகின்றனர். எனவே தான் இம்மலர் கொடியை எவரும் விரும்பி வளர்ப்பதும் இல்லை. பெண்கள் தங்கள் கூந்தலில் சூடுவதுமில்லை.
அழிந்து வரும் நிலையிலுள்ள இச்செடியின் பிறப்பு என்பது விதைகள் மூலமோ, கிளைகள் மூலமோ நடப்பதில்லை. இச்செடியின் நாசுக்கான மெல்லிய வேர்களைக் கொண்ட கிழங்கு போன்ற பகுதிகளிலிருந்துதான் முளை விடுகிறது.வறண்ட காலங்களில் இச்செடி கரிந்து போனாலும், இடியுடன் கூடிய மழைக்காலங்களில் மண்ணிற்குள் அழிந்து போகாமலிருக்கும் கிழங்குகளில் இருந்து மூங்கில் முளைவிட்டு பீறிட்டு வருவதுபோல் வெளிவந்து வளரத் தொடங்கும்.
மணவாளக்குறிச்சி, பாபுஜி தெருவில் வசிக்கும் இதாயத்துல்லா என்பவரது வீட்டில் இம்மலரை நட்டு பாதுகாப்பாக பராமரித்து வரும், அவரது மூத்த சகோதரர் கல்லை அன்சாரி மேலும் இதுபற்றி கூறுகையில், இம்மலரின் அழகில் வியந்த நான் இதன் உயிர் நாடியான கிழங்கை தோண்டி எடுத்து வந்து சுமார் ஓராண்டு முன்பு என் சகோதரர் வீட்டு தோட்டத்தில் நட்டு வைத்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்தபோது இது முளைவிட்டு செடியாக வெளிவந்தது, இன்று பூத்துக் குலுங்குகிறது” என்றார்.
0 Comments: