
குமரிமாவட்ட செய்திகள்
பழமைவாய்ந்த இரணியல் அரண்மனையை மேம்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை செயலாளர் ஆய்வு
பழமைவாய்ந்த இரணியல் அரண்மனையை மேம்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை செயலாளர் ஆய்வு
01-03-2013
குமரி மாவட்டத்தின் பழமைவாய்ந்த இரணியல் அரண்மனையை மேம்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை செயலாளர் கண்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் இரணியல் கிராமத்தில் பழமைவாய்ந்த இரணியல் அரண்மனை உள்ளது. 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழ்நாடு ஆட்சி எல்கைக்குட்பட்ட இரணியல் மார்தாண்டேஸ்வரர் திருக்கோவில் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இரணியல் அரண்மனையை சேரமான் பெருமாள் என்றும் மன்னர் தன்னுடைய நிர்வாக வசதிக்காக இரணியல் பகுதியில் ஒரு அரண்மனையையும், கோட்டையையும் கட்டினார் என வரலாறு கூறுகிறது.
இரணியல் அரண்மனை தற்போதுள்ள நிலையில் அரண்மனை வளாகம் முழுவதும் புதர்கள் சூழ்ந்து உள்ளது. அரண்மனை வளாகத்தில் உள்ள குளம் மிகவும் பழுதடைந்துள்ளது. அரண்மனை கட்டிடம் இடிபாடுகளுடன் மேற்கூரையின் (ஓட்டுக்கூரை) பெரும்பகுதி சிதிலமடைந்து பொலிவிழந்து காணப்படுகிறது.
அரண்மனைக் கட்டிடத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள வசந்த மண்டபமும் சிதைந்து கீழே விழுந்துள்ளது. இதில் உள்ள கல் படுக்கை நல்ல நிலையில் உள்ளது. இதனைச்சுற்றி மொசைக் தளம் இடைக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள மரசிற்ப வேலைப்பாடுகளில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதுவும் சிதிலமடைந்து ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது. இந்த பழமையான அரண்மனை மார்த்தாண்டேஸ்வரர் திருக்கோவிலுக்கு வெளியே தனியாக சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
இரணியல் அரண்மனையின் பாதுகாப்பு மற்றும் புனிதத் தன்மை காப்பாற்றும் பொருட்டு பழமை மாறாமல் புதுப்பித்து கலைக்கூடமாக மாற்றுதல் தொடர்பாக சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத்துறை செயலர் கண்ணன், குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜனுடன் சென்று அரண்மனைப்பகுதி, வசந்தமண்டபம், அரண்மனை முகப்பு பகுதி, திருக்குளம் உள்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் பொன்சுவாமிநாதன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் கண்காணிப்பாளர் நிர்மல்குமார், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஹரிராம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
0 Comments: