Headlines
குளச்சல், மணவாளக்குறிச்சியில்  இருந்து சாமிதோப்புக்கு அய்யா வழி பக்தர்கள் ஊர்வலம்

குளச்சல், மணவாளக்குறிச்சியில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வழி பக்தர்கள் ஊர்வலம்

அய்யா வைகுண்டர் அவதார தினம்: குளச்சல், மணவாளக்குறிச்சியில்  இருந்து சாமிதோப்புக்கு அய்யா வழி பக்தர்கள் ஊர்வலம்
04-03-2013
கலியுகக் கடவுள் என போற்றப்படும் அய்யா வைகுண்ட சாமியின் 181-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. அய்யா வழி பக்தர்கள் புத்தாடை அணிந்து இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடினர். அவதார தினத்தையொட்டி அய்யா வைகுண்ட சாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர் மற்றும் சிறையில் அடைபட்ட திருவனந்தபுரத்தில் இருந்து அய்யா வழி பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நேற்று இரவு நாகர்கோவில் கலைவாணர் கலை அரங்குக்கு வந்தனர். 
மணவாளக்குறிச்சி, பரப்பற்று பகுதியில் இருந்து
சென்ற அய்யாவழி ஊர்வலக்காட்சி 
அதேபோல் குளச்சல், செம்பொன்விளை, பரப்பற்று, சேரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அய்யாவழி பக்தர்கள் நேற்று ஊர்வலமாக புறப்பட்டு நாகர்கோவில் சென்றனர். அங்கு மாசி மாநாடு என்ற அய்யா வைகுண்ட சாமி அவதார தின விழா சமய மாநாடு நடைபெற்றது. அகிலத் திரட்டு அருளுரை, அய்யாவழி நெறியுரை, ஏடு வாசிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிகள் என விடிய, விடிய நடந்த இம்மாநாட்டில் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அய்யா வைகுண்டர் அவதார தினமான இன்று அதிகாலை நாகர்கோவில் கலைவாணர் அரங்கில் இருந்து அய்யா வழி பக்தர்களின் பிரமாண்ட ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அகிலத்திரட்டு நூல் எடுத்து வைக்கப்பட்டு, வாகனம் முன்னே செல்ல அதை பின்தொடர்ந்து அய்யா வழி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். வாகனத்தை தொடர்ந்து காவி கொடி ஏந்தி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். அவர்கள், முத்துக்குடை ஏந்தியும், சிறுவர், சிறுமியர்கள் கோலாட்டம் அடித்தும், அய்யா அரகரா... சிவசிவா என பக்தி கோஷம் முழங்கியும் சென்றனர்.
ஊர்வலம் நாகர்கோவிலில் இருந்து கோட்டார், இடலாக் குடி, சுசீந்திரம், வழுக்கம் பாறை, ஈத்தங்காடு சந்திப்பு வழியாக சாமிதோப்பு தலைமைப்பதியை சென்றடைந்தது. அங்கு பக்தர்கள் பயபக்தியுடன் அய்யாவை தரிசித்தனர். வழிநெடுக பக்தர்களுக்கு மோர், தயிர் சாதம், லெமன் சாதம், உம்பாம், பழங்கள் உள்ளிட்ட தானங்கள் வழங்கப்பட்டன.
அய்யா அவதார தினத்தையொட்டி இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஊர்வலத்தில் 3 மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு வரை போலீசார் தீவிரமாக கண்காணித்து பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.

இதேபோல முட்டப்பதி, அம்பலபதி, தாமரைகுளம் பதி, பூப்பதி, அரசம்பதி, தெட்சணத்து துவாரகாபதி உள்பட குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அய்யா கோவில்களிலும் அவதார தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, தாலாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அய்யாவை வாகனத்தில் எழுந்தருளச் செய்து அந்தந்த பகுதிகளில் தேர்ப்பவனி, சப்பர பவனியும் நடத்தப்பட்டது.
குறிப்பாக தர்மங்கள் அதிகளவில் நடந்தன. அன்னதானம், பால் தர்மம், மோர் தர்மம், இனிப்புகள், பழங்கள் என பலவகை உணவு பொருட்கள் தானங்களாக வழங்கப்பட்டது. இன்று இரவு அய்யா வழி இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. திருச்செந்தூரில் உள்ள அய்யா கோவில் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யா கோவில்களிலும் இன்று அவதார தின விழா உற்சாகமாக நடந்தது. அய்யா வாகன பவனி, ஊர்வலங்களும் நடந்தன.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: