Headlines
இரயுமன்துறையில் புதைக்கப்பட்ட மீனவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு

இரயுமன்துறையில் புதைக்கப்பட்ட மீனவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு


இரயுமன்துறையில் புதைக்கப்பட்ட மீனவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பு
07-02-2013
கொல்லங்கோடு அருகே பூத்துறை கடற்கரை கிராமத்தில் இருந்து கடந்த மாதம் 29-ந்தேதி சேவியர், வறுவேல் பிள்ளை, அமல்ராஜ், ஜோய் ஆகிய 4 மீனவர்கள் கட்டு மரத்தில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்கள் 4 பேரும் மறுநாளே கரை திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் கரைக்கு வராததால் உறவினர்கள் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கப்பல்படை விமானங்கள் மூலம் மீனவர்களை தேடினர். இதில் வள்ளவிளை கடல் பகுதியில் கடந்த 2-ந்தேதி ஒரு பிணம் மிதந்தது. அது பூத்துறையில் இருந்து மீன் பிடிக்க சென்று மாயமான அமல்ராஜின் பிணம் என்று அவரது உறவினர்கள் கூறினர்.

இதையடுத்து மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அந்த பிணத்தை அமல்ராஜ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவர்களும் பிணத்தை எடுத்துச்சென்று இறுதி மரியாதை செலுத்தி இரயுமன்துறையில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில் இலங்கை நீர் கொழும்பு பகுதியில் குமரி மீனவர்கள் 3 பேரை இலங்கை மீனவர்கள் மீட்டதாக தகவல் கிடைத்தது. அவர்களில் இறந்ததாக கருதப்பட்ட அமல்ராஜும் இருந்தார். அவர் இலங்கையில் இருந்தபடி இங்குள்ள உறவினர்களிடம் பேசினார். மேலும் அவர்களுடன் சென்றவர்களில் வறுவேல் பிள்ளை மட்டும் இறந்து போனதாகவும் அவரது உடலை கட்டுமரத்தில் கட்டி கடலில் விட்டு வந்ததாகவும் கூறினர்.

அமல்ராஜ் உயிரோடு இருப்பது தெரிய வந்ததால் அவரது உறவினர்கள் புதைத்த பிணம் யாருடையது? என்ற கேள்வி எழுந்தது. இதில் பூத்துறை  மீனவர்கள் மாயமான அதே நாளில் பொழிக்கரை கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்களில் 3 பேர் கரை திரும்பாமல் மாயமானது தெரிய வந்தது. 
இவர்களில் ஒருவரான ஜேம்ஸ் என்பவர் இறந்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் சந்தேகப்பட்டனர். எனவே இரயுமன்துறையில் புதைக்கப்பட்ட பிணத்தின் அங்க அடையாளங்களை விசாரித்தப்போது, அது ஜேம்சின் உடலாக இருக்கும் என்று அவரது உறவினர்கள் கருதினர். இதையடுத்து இரயுமன் துறையில் புதைக்கப்பட்ட உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. அந்த உடல் ஜேம்சின் உடல் என்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அதிகாரிகள் அதனை ஜேம்சின் மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் உடலை பெற்றுக்கொண்டு ஜேம்சின் சொந்த ஊரான ராஜாக்கமங்கலம் துறையில் மீண்டும் புதைத்தனர்.
இதற்கிடையே இலங்கையில் மீட்கப்பட்ட 3 மீனவர்களையும் சொந்த ஊருக்கு அழைத்து வர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி அவர்கள் இன்று இலங்கையில் இருந்து விமானத்தில் மதுரை வருகிறார்கள். அவர்களை வரவேற்க அவர்களின் குடும்பத்தாரும், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் நிர்வாகி பாதிரியார் சர்ச்சில் மற்றும் மீனவ அமைப்பினரும் செல்கிறார்கள். இன்று மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து அவர்கள் நாகர்கோவில் புறப்படுகிறார்கள். நாகர்கோவில் வந்து சேர்ந்ததும் அவர்கள் கலெக்டர் நாகராஜன் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளை சந்தித்து தங்களை மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி கூறுகிறார்கள்.

We are "Manavai Murasu" online Tamil news Magazine. We providing News, Information, Events and Announcements in and around Manavalakurichi area, and located Nagercoil, Kanyakumari District. This site organized by YemYes (Network) Group of Campanies.

0 Comments: