
சுற்றுவட்டார செய்திகள்
மண்டைக்காடு அருகே பிளஸ்-2 மாணவன் விபத்தில் பலி
மண்டைக்காடு அருகே பிளஸ்-2 மாணவன் விபத்தில் பலி
26-02-2013
மண்டைக்காடு அருகே உள்ள காரியாவிளையை சேர்ந்தவர் ஜேம்ஸ்குமார். கட்டிட தொழிலாளி. இவரது மகன் ஜெனிஷ் குமார் (வயது 18). இவர் குளச்சலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருடன் குளச்சல் இலப்பவிளை அப்துல் ரகுமான் (வயது 17), குறும்பனையை சேர்ந்த சகாய ஹெர்சன் (17) ஆகியோரும் பிளஸ்-2 படித்து வந்தனர். 3 பேரும் நண்பர்கள்.
இவர்களுக்கு குறும்பனை மீன் கம்பெனியில் வேலை செய்த சுரேஷ் (25) என்பவர் நண்பர். நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிளில் திங்கள்சந்தைக்கு சென்றனர். பின்னர் மாலை 5 மணிக்கு திங்கள்சந்தையில் இருந்து குளச்சலுக்கு திரும்பினர்.
ஒரு மோட்டார் சைக்கிளை சுரேஷ் ஓட்ட சகாய ஹெர்சன் பின்னால் அமர்ந்து இருந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளை ஜெனிஷ்குமார் ஓட்ட அப்துல் ரகுமான் பின்னால் அமர்ந்து இருந்தார். உடையார்விளை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் இருந்தனர். அப்போது போலீசார் மோட்டர் சைக்கிளை நிறுத்துமாறு கூறினர்.
சுரேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த ஜெனிஷ்குமார் மோட்டார் சைக்கிள், திடீர் என்று சுரேஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதி தாறுமாறாக சென்று அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெனிஷ் குமார் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் காயம் அடைந்தனர்.
அவர்கள் 3 பேரும் குளச்சலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments: