
District News
இரணியல் அருகே புதுப்பெண், குளத்தில் மூழ்கடித்து கொலை: விபத்து என நாடகமாடிய கணவன் கைது-வாக்குமூலம்
இரணியல் அருகே புதுப்பெண், குளத்தில் மூழ்கடித்து கொலை: விபத்து என நாடகமாடிய கணவன் கைது-வாக்குமூலம்
05-02-2016
நாகர்கோவில் காஞ்சிரகோடு அருகே உள்ள குழிவிளை பகுதியை சேர்ந்தவர் முத்துமணி. இவருடைய மகள் கிருஷ்ணவேணி (வயது 25). இவருக்கும் கூட்டமாவு அருகே பாம்பு தூக்கி விளையை சேர்ந்த பொனிபாஸ் மகன் பிரபுவுக்கும் (29) கடந்த 16.9.2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
![]() |
பிரபு |
திருமணத்தின் போது மணமகள் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை வீட்டாருக்கு நிறைய சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணவேணி 4 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 2-ந் தேதி அரசமூட்டுக்குளக்கரையில் என்னுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது வாகனம் மோதி கிருஷ்ணவேணி குளத்தில் மூழ்கி இறந்து விட்டதாக, பிரபு செல்போன் மூலம் உறவினர்களுக்கு தெரிவித்தார். இதுதொடர்பாக இரணியல் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே பிரபு கூறியதை கிருஷ்ணவேணியின் தாயார் சரசம் ஏற்கவில்லை. கூடுதல் வரதட்சணை கேட்டு ஏற்கனவே பிரபு, கிருஷ்ணவேணியை கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் கிருஷ்ணவேணியை பிரபு கொன்று விட்டு நாடகமாடியிருக்கலாம் என்றும் இரணியல் போலீசில் புகார் மனு கொடுத்தார்.
இதனையடுத்து போலீசார் முதலில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே பிரபுவிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறிய பிரபு, பிறகு மனைவி கிருஷ்ணவேணியை கொன்று விட்டு நாடகமாடியதை ஒத்து கொண்டார். போலீசார், கொலை வழக்காக மாற்றி அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரபு போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தேன். கடந்த 16.9.15 அன்று கிருஷ்ணவேணியுடன் எனக்கு திருமணம் நடந்தது. ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகளும், ரூ.4 லட்சம் ரொக்கமும் மணமகள் வீட்டார் சார்பில் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டது.
திருமணமான புதிதில் நாங்கள் ஒரு மாதம் சந்தோசமாக இருந்தோம். வீட்டு வேலையை கிருஷ்ணவேணி ஒழுங்காக செய்வது கிடையாது. இதனை கண்டித்ததால் எங்களுக்குள் அடிக்கடி சிறு, சிறு தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால் கிருஷ்ணவேணியை எச்சரிக்கும் விதமாக அவரை பெற்றோரின் வீட்டுக்கு சில தடவை அனுப்பி வைத்தேன். அந்த சமயத்தில் அவர்கள் சமாதானப்படுத்தி கிருஷ்ணவேணியை வீட்டில் வந்து விட்டனர்.
இதற்கிடையே எனக்கு பணம் தேவைப்பட்டதால் கிருஷ்ணவேணியின் நகைகளை அடகு வைத்தேன். இதுதொடர்பாகவும் எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. மேலும் என்னுடைய தங்கையிடமும் கிருஷ்ணவேணி சண்டை போட்டு வந்தார். இதனால் கிருஷ்ணவேணி மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டு, கொலை செய்யும் எண்ணம் தோன்றியது. இதற்காக திட்டம் தீட்டி வந்தேன்.
இந்நிலையில் என்னுடைய அம்மா உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் நெய்யூரில் உள்ள பெரியம்மாவின் வீட்டில் இருந்து வந்தார். அம்மாவை பார்த்து விட்டு நலம் விசாரித்து வரலாம் என்று கிருஷ்ணவேணியை அழைத்தேன். ஆனால் வரமாட்டேன் என்று கூறினார். பிறகு கட்டாயப்படுத்தி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றேன்.
செல்லும் வழியில் கிருஷ்ணவேணி மீது பாசமாக இருப்பது போல் நடித்தேன். தக்கலை பஸ் நிலையம் அருகே பூ, குங்குமம் போன்றவற்றை அவளுக்கு வாங்கி கொடுத்தேன். உடனே அவள் சந்தோசமடைந்தாள். பிறகு கிருஷ்ணவேணியிடம் பேச்சு கொடுத்தவாறு அரசகுளக்கரையில் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மீது கிருஷ்ணவேணியை தள்ளி கொல்ல முயன்றேன். ஆனால் கிருஷ்ணவேணி தப்பித்து விட்டார். காலில் லேசான காயம் ஏற்பட்டது. வாகனத்தில் வந்தவர் எச்சரித்து விட்டு சென்று விட்டார்.
காலில் உள்ள காயத்தை கிருஷ்ணவேணி பார்த்து கொண்டிருந்த போது, திடீரென நான் குண்டு, குட்டாக தூக்கி குளத்துக்குள் தூக்கி போட்டேன். குளத்துக்குள் தத்தளித்த கிருஷ்ணவேணி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அலறினாள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை பார்த்த நான், குளத்துக்குள் குதித்து கிருஷ்ணவேணியை காப்பாற்றுவது போல் நடித்தேன். அந்த சமயத்தில் குளத்தில் அவரை மூழ்கடித்தேன். இதனை கவனித்த சிலர் நீ காப்பாற்றுவது போல் தெரியவில்லையே என்றனர். அதற்குள் கிருஷ்ணவேணி மயக்க நிலைக்கு சென்றார். பிறகு அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணவேணி இறந்தார். மயக்க நிலையிலேயே கிருஷ்ணவேணி இறந்ததால், அவர் என்னை பற்றி போலீசில் எதுவும் தெரிவிக்க முடியவில்லை. இதனால் தப்பித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாட்டி கொண்டேன். இவ்வாறு பிரபு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
0 Comments: