
District News
பொது இ–சேவை மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இணையவழி பதிவு செய்யும் வசதி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்
பொது இ–சேவை மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இணையவழி பதிவு செய்யும் வசதி கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்
05-02-2016
டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இணையவழி பதிவு செய்யும் வசதி விரைவில் பொது இ–சேவை மையங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
எல்காட் (தமிழ்நாடு மின்னணு நிறுவனம்) நிறுவனம் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் என 360 பொது இ–சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொது மக்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் வருவாய்த்துறை மற்றும் சமூகநலத்துறையின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒளிவு மறைவின்றி மின்னணு முறையில் அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் தங்கள் இருப்பிடத்தின் அருகிலேயே பெறும் வகையில் எல்காட் நிறுவனத்தால் அரசு இ–சேவை மையங்கள் நிறுவப்பட்டு, அதன் மூலம் எளிதான முறையில் கிடைக்க வழிவகை செய்துள்ளது.
தற்போது இந்த மையங்கள் மூலம் பான் கார்டு, பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், மொபைல் டேட்டா கார்டு ரீசார்ஜ்கள், அனைத்து தொலைக்காட்சி ரீசார்ஜ் கள், அனைத்து மொபைல் ரீசார்ஜ்கள், எல்ஐசி காப்பீட்டுத் தொகை செலுத்துதல், மொபைல் கட்டணம் செலுத்துதல், ரெட் பஸ் மற்றும் பஸ் இந்தியா பஸ்களில் முன்பதிவு செய்தல் போன்ற சேவைகளை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆதார் அட்டை நெகிழி வடிவில் (ஸ்மார்ட் கார்டு) அச்சு எடுத்தல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் (குரூப்–1, குரூப்–2, குரூப் –4, வி.ஏ.ஓ) தேர்வுகளுக்கான இணையவழி பதிவு செய்தல் மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் ஆகிய சேவைகளையும் விரைவில் வழங்க எல்காட் நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
0 Comments: