Manavai News
மணவாளக்குறிச்சியில் மதுக்கடை மூடல்: குடிமகன்கள் அதிர்ச்சி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. குமரி மாவட்டத்தில் 145 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. 2016-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 6 கடைகள் அடைக்கப்பட்டது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சர் பொறுப்பேற்றதும் மேலும் 3 கடைகள் மூடப்பட்டன. இதனால் குமரி மாவட்ட மதுக்கடைகளின் எண்ணிக்கை 136 ஆக குறைந்தது.
இப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மேலும் 56 கடைகளை அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கடைகளுக்கு மாற்று இடம் இன்னும் கிடைக்காததால் இப்போது மாவட்டத்தில் 80 கடைகளே செயல்படுகிறது.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில் தான் எப்போதும் குடிமகன்களின் கூட்டம் அலைமோதும். இந்த கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளை தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த கடைகளில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு கடைகளிலும் மது வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல கடைகளில் மது வாங்க குடிமகன்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கிச்சென்றனர்.
இந்நிலையில் மணவாளக்குறிச்சி மெயின் ரோட்டில் இருந்த கடையும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாகர்கோவில் பகுதியில் ராமன்புதூர், செட்டிக்குளம், டெரிக் சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டதால் பீச்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியது. அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கும் நிலை ஏற்பட்டது.
குமரி மேற்கு மாவட்டத்தில் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்கும் நிலை ஏற்பட்டது. பல இடங்களில் குடிமகன்கள் மது பாட்டில்கள் வாங்க முடியாமல் தகராறிலும் ஈடுபட்டனர்.
பிரதான கடைகள் மூடப்பட்டதால் குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக திருட்டு மது விற்பனை அதிகரித்துள்ளது. அரசு நிர்ணயித்த விலையை விட ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதலாக விற்கப்பட்டது. வரிசையில் நின்று மது வாங்க கூச்சப்படுவோர் திருட்டு மதுபானங்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.
இது போல கூட்டத்தைப் பயன்படுத்தி சில கடைகளில் ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக மது பானங்களுக்கு கட்டணம் வசூலித்ததாக கடை ஊழியர்கள் மீது குடிமகன்கள் குற்றம் சாட்டினர்.
தற்போது மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகள் விரைவில் திறக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக இடம் பார்க்கும் பணியும் தொடங்கி விட்டது.
மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் புதிய கடைகளுக்கு இடம் பார்த்து தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகள் சிலர் நிர்பந்திப்பதாக கூறினர். புதிய கடைகள் அமைந்தால் மட்டுமே அவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று கூறியதாகவும் வருத்தப்பட்டனர்.
வேலையில் மீண்டும் அமர்வதற்காக ஊழியர்கள் பலர் அவசரம் அவசரமாக கடை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனை அதிகமாக நடக்கும் இடங்களை குறிவைத்து புதிய கடைகளை திறக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தெருக்களில், பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுதலங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளனர். பல இடங்களில் பெண்கள் அமைப்பினரும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments: