
சுற்றுவட்டார செய்திகள்
பொதுமக்கள் பாதிக்காத வகையில் குளச்சல் பகுதியில் வர்த்தக துறைமுகத்தை அமைக்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் மனு
பொதுமக்கள் பாதிக்காத வகையில் குளச்சல் பகுதியில் வர்த்தக துறைமுகத்தை அமைக்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் மனு
04-02-2016
அகில இந்திய கிறிஸ்தவர் முன்னேற்ற சேனை தலைவர் வக்கீல் தியோடர் சேம் தலைமையில் பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
குமரி மாவட்டத்தில் குளச்சல் வர்த்தக துறைமுகத் திட்டம் தமிழகத்தினுடைய கனவுத் திட்டமாகும். இத்திட்டத்தினால் குமரி மாவட்டம் மட்டுமல்லாது இந்தியாவே வளர்ச்சி அடையும். ஆனால் இந்த திட்டம், திட்டமிட்டபடி குளச்சல் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்தால் யாரும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இந்த துறைமுகத்தை எந்த தொடர்பும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் நெருக்கமாக வாழுகிற இனயம் பகுதியில் அமைப்பதால், மக்கள் நெருக்கம் கொண்ட கடலோரம் மற்றும் கரையோர பகுதிகளான கோழிக்கோடு, ஆவரவிளை, பாரக்கன்விளை, பறம்புவிளை, காட்டுவிளை, சரவிளை, குற்றிப்பாறவிளை, எள்ளுவிளை, இருக்கன்பாடி, தேரிவிளை, உடவிளை, தோப்புவிளை போன்ற பகுதிகளை அதிகாரிகள் தேர்ந்தெடுத்து அளவுகள் குறியீடு செய்வதை பார்க்கும்போது லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும் என்பது தெளிவாக தெரிகிறது. குளச்சல் பகுதியில் இந்த துறைமுகத்தை அமைத்தால் தற்போது மக்கள் பாதிக்கப்படுவதை விட 90 சதவீதம் பாதிப்பு குறையும். வெறும் 10 சதவீதம் மட்டுமே மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே அரசு இதனை கவனத்தில் கொண்டு இனயம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் பல கி.மீ. தொலைவு வரை நெருக்கமாக வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கலெக்டர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments: