
District News
குளத்தில் தள்ளி புதுப்பெண் கொலையா? மருமகன் மீது மாமியார் பரபரப்பு புகார்
குளத்தில் தள்ளி புதுப்பெண் கொலையா?
மருமகன் மீது மாமியார் பரபரப்பு புகார்
04-02-2016
குமரி மாவட்டம் காஞ்சிரகோடு அருகே உள்ள குழிவிளை பகுதியை சேர்ந்தவர் முத்துமணி. இவருடைய மகள் கிருஷ்ணவேணி (வயது 25). இவருக்கும் கூட்டமாவு அருகே பாம்பு தூக்கிவிளையை சேர்ந்த பொனிபாஸ் மகன் பிரபுவுக்கும் (29) கடந்த 16.9.2015–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மணமகள் வீட்டார் சார்பில் 70 பவுன் நகையும், ரூ.4 லட்சம் ரொக்கமும், மாப்பிள்ளைக்கு 9 பவுன் செயினும், 2 பவுன் கை செயினும் மற்றும் வீட்டு உபயோக பொருட்களும் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணவேணி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று முன்தினம் கிருஷ்ணவேணியுடன் பிரபு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். ஆழ்வார்கோவில் அருகே அரசமூட்டுகுளக்கரையில் வந்த போது ஒரு வாகனம் மோதி கிருஷ்ணவேணியும், நானும் குளத்துக்குள் விழுந்து விட்டதாகவும், இதில் கிருஷ்ணவேணி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாகவும் பிரபு செல்போனில் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் இதனை கிருஷ்ணவேணியின் தாயார் சரசம் மறுத்தார். என்னுடைய மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
கூடுதல் வரதட்சணை கேட்டு என்னுடைய மகள் கிருஷ்ணவேணியை பிரபு மற்றும் பிரபுவின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி வந்தனர். மகளின் பெரும்பாலான நகைகளை அவர்கள் அடகு வைத்தும், சிலவற்றை விற்றும் உள்ளனர். சில சமயம் எங்களுடைய வீட்டுக்கு கிருஷ்ணவேணியை அனுப்பி வைத்த சம்பவமும் நடந்துள்ளது. இதனையடுத்து நாங்கள் சமரசம் செய்து அனுப்பியுள்ளோம்.
இந்நிலையில் விபத்தினால் குளத்துக்குள் தவறி விழுந்து என்னுடைய மகள் கிருஷ்ணவேணி இறந்து விட்டதாக பிரபு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவல் நம்பும்படியாக இல்லை. கிருஷ்ணவேணியை குளத்துக்குள் தள்ளி பிரபு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கிருஷ்ணவேணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக கிருஷ்ணவேணியின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன கிருஷ்ணவேணிக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
0 Comments: