
சுற்றுவட்டார செய்திகள்
ராஜாக்கமங்கலத்தில் அலை இழுத்து சென்ற வாலிபர் உடல் கரை ஒதுங்கியது
ராஜாக்கமங்கலத்தில் அலை இழுத்து சென்ற வாலிபர் உடல் கரை ஒதுங்கியது
11-01-2016
நாகர்கோவில் தம்மத்து கோணத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது29). இவரது நண்பர் ஆனந்த்(26). இருவரும் கட்டிடத் தொழிலாளிகள். நேற்று விடுமுறை நாள் என்பதால் ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஆயிரங்கால் பொழிமுகம் கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு கடலில் ஆனந்தமாக குளித்தனர். அப்போது திடீரென வந்த ராட்சத அலை நண்பர்கள் இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவர்கள் இருவரும் அலறிய சத்தம் கேட்டு கரையோரம் நின்ற மீனவர்களும், கடல் ஆமை முட்டைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர்கள் ராஜேந்திரன், செல்வகுமார் ஆகியோரும் கடற்கரைக்கு ஓடிச்சென்றனர். அவர்கள் கடலில் தத்தளித்த சிவக்குமார், ஆனந்த் இருவரையும் மீட்க முயன்றனர். இதில் ஆனந்த் காப்பாற்றப்பட்டார். சிவக்குமார் கடலின் ஆழமான பகுதிக்குள் சென்று விட்டார்.
இந்த சம்பவம் ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீனவர்கள் துணையுடன் கடலுக்குள் தேடுதல்வேட்டை நடத்தினர். இதற்கிடையே சிவக்குமாரை அலை இழுத்துச் சென்ற தகவல் அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடற்கரைக்கு ஓடினர். கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. பச்சைமாலும் கடற்கரைக்குச் சென்று அங்கு நடந்த தேடும் பணியை முடுக்கிவிட்டார். நள்ளிரவு வரை தேடியும் சிவக்குமார் உடல் கிடைக்கவில்லை.
இதனால் அவரது உறவினர்கள் கண்களில் கண்ணீர் வடிய கடற்கரையிலேயே காத்திருந்தனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் ராஜாக்கமங்கலம் ஆயிரங்கால் பொழிமுகத்தில் இருந்து சற்று தொலைவில் ஒரு உடல் கரைஒதுங்கியது. உடனே அங்கிருந்தவர்கள் அனைவரும் ஓடிச் சென்று பார்த்த போது அது அலை இழுத்துச் சென்ற சிவக்குமார் உடல் என தெரிய வந்தது. கடலோர குழும போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிவக்குமார் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
0 Comments: