
District News
தலைமுறைகள் வாழ குளச்சல் துறைமுகம்: பொன். ராதாகிருஷ்ணன் உறுதி
தலைமுறைகள் வாழ குளச்சல் துறைமுகம்: பொன். ராதாகிருஷ்ணன் உறுதி
11-01-2016
சுசீந்திரத்தில் ரூ.7½ கோடி செலவில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 3 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4–வது தூணுக்கான பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் அதிகாலை 7 மணிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பாலப்பணிகள் முறையாக, விரைவாக நடைபெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன் பிறகு நாகர்கோவில் தம்மத்துகோணத்தில் உள்ள ஞானம் காலனியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் செலவில் கட்டப்பட்ட கலையரங்கத்தை திறந்து வைத்தார்.
விழாவில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது:– குமரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து மத்திய சுற்றுலாத் துறை மந்திரியுடன் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தேன். கன்னியாகுமரி கடற்கரை மேம்பாட்டு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
கன்னியாகுமரியில் இருந்து புதுச்சேரிக்கு கடல்வழி போக்குவரத்து நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்கவும் இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுப்பணிகள் நடந்துள்ளன. குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைத்தே தீருவோம். அதற்கான ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. எந்த திட்டங்களை அறிவித்து செயல்படுத்த நினைத்தாலும் அதற்கு எதிர்ப்புகள் எழுவது சகஜம். அதனை எதிர்க்கொண்டு திட்டங்களை நிறைவேற்றுவோம்.
குமரி மாவட்ட இளம் தலைமுறையினர் வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் நமது ஊரிலேயே பணி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதற்கான நடவடிக்கையின் துவக்கம்தான் குளச்சல் துறைமுகம். இத்துறைமுகம் அமைந்தால் குமரி மாவட்டம் வளர்ச்சி பெறும். தொழில்கள் பெருகும். நமது தலைமுறைகள் இங்கேயே வாழும் நிலை உருவாகும். அதனை நாங்கள் ஏற்படுத்தி கொடுப்போம்.
மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரத்தில் மேம்பாலங்கள் அமைய உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 19–ம் தேதி நடைபெறும். இதில் மத்திய மந்திரி நிதின்கட்காரி கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments: