District News
சசிபெருமாள் மரணத்துக்கு கண்டனம்: குமரி மாவட்டத்தில் 4–ம் தேதி முழு அடைப்பு போராட்டம்
சசிபெருமாள் மரணத்துக்கு கண்டனம்: குமரி மாவட்டத்தில் 4–ம் தேதி முழு அடைப்பு போராட்டம்
01-08-2015
மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்களுக்கு அருகே இந்த கடை இருப்பதால் இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தனர்.
இதுவரை நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் கடையை அப்புறப்படுத்தக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு கொடுத்தனர். அதனை விசாரித்த கோர்ட்டு அந்த கடையை உண்ணாமலைக் கடை பகுதியில் இருந்து அகற்ற உத்தரவிட்டது. அதன்பிறகும் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காந்தியவாதி சசிபெருமாளும் ஆதரவு தெரிவித்தார். அவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்.
அதன்பிறகும் டாஸ்மாக் கடை அப்புறப்படுத்தப்படவில்லை. இதையடுத்து நேற்று அங்கு தீக்குளிப்பு போராட்டம் நடத்தப் போவதாக சசிபெருமாளும், உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவரும், பா.ஜனதா கட்சியின் நிர்வாகியுமான ஜெயசீலன் அறிவித்தனர். நேற்று காலை இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள 60 அடி உயர செல்போன் டவரில் ஏறினர். கையில் மண்எண்ணெய் கேனையும் எடுத்துச் சென்றனர். இந்த தகவல் அறிந்து மார்த்தாண்டம் போலீசார் மற்றும் குழித்துறை தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் செல்போன் டவரில் ஏறி நின்ற சசிபெருமாளையும், ஜெயசீலனையும் கீழே இறங்கி வரும்படி கூறினர். அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து டாஸ்மாக் கடையை அகற்றும் வரை கீழே இறங்க மாட்டோம் என கூறினர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் சுற்று வட்டார மக்களும் குவிந்தனர். 100–க்கும் மேற்பட்டோர் திரண்டதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் உயர் அதிகாரிகளும் வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையில், சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் நீடித்த இந்த போராட்டத்தின்போது, செல்போன் டவர் மீது ஏறிய தீயணைப்பு துறையினர் சசி பெருமாளை மயங்கிய நிலையில் மீட்டனர். அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது.
சசிபெருமாள் உடல் வைக்கப்பட்டுள்ள ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி முன்பு இன்று காலை முதலே அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் தொண்டர்களுடன் குவிந்தனர்.
பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கணேசன், கோட்ட பொறுப்பாளர் வேல் பாண்டியன், பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, துணை தலைவர் தேவ், நகரசபை தலைவி மீனா தேவ் மற்றும் தொண்டர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று சசிபெருமாள் சகோதரர் செல்வத்தை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்தனர்.
இது போல காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட தலைவர் அசோகன் சாலமன், கிழக்கு மாவட்ட தலைவர் கன்னாட்டு விளை பாலையா, பிரின்ஸ் எம்.எல்.ஏ. மற்றும் வக்கீல் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் மாகீன்,
தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்.பி.க்கள் ஆஸ்டின், ஹெலன் டேவிட்சன், கபிலன், டேவிட்சன், நகர செயலாளர் வக்கீல் மகேஷ், தே.மு.தி.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் நிர்வாகிகள், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், வக்கீல் வெற்றிவேல், கோட்டார் கோபால்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகேசன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நந்த கோபால், மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினரும் சசிபெருமாள் சகோதரருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது சசிபெருமாளின் கோரிக்கையை தொடர்ந்து முன் எடுத்து செல்வது எப்படி? இதற்காக நடத்த போகும் அடுத்த கட்ட போராட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் சசிபெருமாள் சாவுக்கு நீதி கேட்டும், டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என அரசை வலியுறுத்தியும் வருகிற 4–ம் தேதி குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பொது மக்களின் ஆதரவை திரட்டி போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த வேண்டும் என ஆலோசனையில் ஈடுபட்ட கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:– சசிபெருமாள் சாவுக்கு மாவட்ட நிர்வாகமே காரணம். போலீசார் இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சசிபெருமாளின் குடும்பத்தினர் நிதி தேவையில்லை. நீதி வேண்டும் என்று கேட்டுள்ளனர். அரசு வேலை வேண்டாம். டாஸ்மாக் கடைகளை அகற்றுங்கள் என கூறி உள்ளனர். அவர்களின் எண்ணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் வருகிற 4–ம் தேதி மாவட்டம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
டாஸ்மாக் கடைகளையும் திறக்க விடாமல் போராட்டம் நடத்தப்படும். இதற்கு மதுவுக்கு எதிராக போராடும் அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். தற்போது வெள்ளமடம், கட்டையன்விளை போன்ற பகுதிகளில் வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிகள் அருகே டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றையும் அப்புறப்படுத்த போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த அறிவிப்புக்கு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.
0 Comments: