சுற்றுவட்டார செய்திகள்
குளச்சல்-கொட்டில்பாடு கடற்கரை கிராமங்களில் சுனாமியில் பலியானவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி
குளச்சல்-கொட்டில்பாடு கடற்கரை கிராமங்களில் சுனாமியில் பலியானவர்களின் நினைவிடங்களில் அஞ்சலி
27-12-2014
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி சுனாமி ஏற்பட்டபோது குளச்சலில் பேரழிவு ஏற்பட்டது. அப்போது குளச்சல் பகுதியில் மட்டும் 414 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரது உடல்களும் குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு பலியானதன் நினைவாக ஸ்தூபியும் அமைக்கப்பட்டுள்ளது. 10-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அங்கு பொதுமக்கள் திரண்டு வந்து மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதில் த.மா.கா. (மூப்பனார்) சார்பில் ஜான்ஜேக்கப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சுனாமியில் பலியானவர்கள் நினைவிடத்தில் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் டாக்டர் பினுலால் சிங், தர்மராஜ், பிராங்கிளின், தனபால், ஸ்டீபன், முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ், அருள்தாஸ், இருதயராஜன், புஷ்பராஜ், ஜெரோம், லீனஸ், சுனில், ரமேஷ், அலெக்ஸ், தனிஸ்டன், ஜாண்சன், செல்வின், ஆல்பர்ட், கண்ணன், ஆன்றனி, கிறிஸ்டோபர் உள்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து கொட்டில்பாட்டில் சுனாமியில் பலியானவர்களின் நினைவிடத்திலும் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கொட்டில்பாடு மீனவர் கிராமத்தில் 199 பேர் சுனாமியில் பலியானார்கள். அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை தோட்டத்தில் பூக்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கொட்டில்பாட்டில் அமைந்துள்ள நினைவு ஸ்தூபிக்கு பங்குதந்தைகள் பெலிக்ஸ், அலெக்சாண்டர், சர்ச்சில் ஆகியோர் மலர் வளையம் வைத்தனர்.
முன்னதாக காணிக்கை மாதா ஆலயத்தின் அருகில் உள்ள நினைவு ஸ்தூபியில் இருந்து கொட்டில்பாடு கல்லறை தோட்டம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அங்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது உறவினர்களை இழந்தவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு கதறி அழுதனர். எத்தனை ஆண்டுகள் சென்றாலும் உறவினர்களை இழந்த துயரம் மட்டும் என்றைக்குமே மாறாது என்பதை அங்கு பார்க்க முடிந்தது.
0 Comments: