
District News
நாகர்கோவில்–திருநெல்வேலி இடையே “எங்கும் நிற்கும்” பஸ்கள் இயக்கம்
நாகர்கோவில்–திருநெல்வேலி இடையே “எங்கும் நிற்கும்” பஸ்கள் இயக்கம்
08-08-2015
நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் தினமும் “என்ட் டூ என்ட்’’ என்ற 13 இடைநில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் 1¼ மணி நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கும், திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கும் சென்றடைவதால் பயணிகளிடையே “என்ட் டூ என்ட்’’ பஸ்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. அதனால் இந்த பஸ்களுக்கு எப்போதும் பயணிகள் கூட்டம் இருந்து கொண்டிருக்கிறது.
இந்த பஸ்களைத்தவிர 565 (எஸ்.எப்.எஸ்.) என்ற நாங்குனேரி வழித்தட பஸ்கள் 13–ம், 565 (லோக்கல்) பஸ்கள் 4–ம், 564 என்ற ஏர்வாடி வழித்தட பஸ்கள் 10–ம் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கும், திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் வகையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிக அளவில் பொதுமக்களிடம் இருந்து வந்து கொண்டிருந்தது.
அதைத்தொடர்ந்து 565 (லோக்கல்) நாங்குனேரி வழித்தட திருநெல்வேலி பஸ்கள் நான்கிலும் “எங்கும் நிற்கும்’’ என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். எனவே இந்த பஸ்கள் நாங்குனேரி வழித்தடத்தில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் எங்கெங்கெல்லாம் பஸ் நிறுத்தங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும்.
அதனால் இந்த பஸ்கள் நாகர்கோவிலில் இருந்து திருவெல்வேலிக்கு செல்ல குறைந்தது 2 மணி நேரமும், அதிக பட்சமாக 2.30 மணி நேரமும் ஆகும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் 565 (லோக்கல்) பஸ்களாக இயங்கியபோது இருந்த டிக்கெட் கட்டண வசூலைவிட, “எங்கும் நிற்கும்’’ பஸ்களாக தற்போது இயங்கும்போது உள்ள டிக்கெட் கட்டண வசூல் குறைவு என்றும், மேலும் பயணிகள் கூட்டமும் குறைந்திருப்பதாகவும், டிக்கெட் கட்டண வசூல் இப்படியே இருந்தால் இந்த பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது, என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
0 Comments: