
District News
கத்தார் நாட்டில் குமரி மாவட்ட மீனவர் சுட்டுக்கொலை: கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
கத்தார் நாட்டில் குமரி மாவட்ட மீனவர் சுட்டுக்கொலை: கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
07-08-2015
குமரி மாவட்டம் இணையம் புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ. இவருடைய மகன் அனிஷ் (வயது 21). மீனவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த வீனஸ், ராஜூ, மைக்கேல் உள்பட 5 பேர் கத்தார் நாட்டில் தங்கியபடி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
சம்பவத்தன்று வழக்கம் போல் 5 பேரும் விசை படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அங்கு அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ஈரான் நாட்டை சேர்ந்த கடற் கொள்ளையர்கள் அங்கு வந்து திடீரென மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் மீனவர் அனிஷ் மீது குண்டு பாய்ந்தது. இதனால் அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடனே மற்ற மீனவர்கள் விசைப்படகை வேகமாக செலுத்தி கடற்கொள்ளையரிடம் இருந்து தப்பி பக்ரைன் நாட்டின் கடல் எல்லைக்கு சென்று விட்டனர். அப்போது கடலில் ரோந்து பணியில் ஈடுபட்ட பக்ரைன் கடற்படையினர் பலியான அனிஷையும், மற்ற 4 மீனவர்களையும் மீட்டு கடற்கரைக்கு கொண்டு சென்றனர். குண்டு பாய்ந்து பலியான அனிஷின் உடல் அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குமரி மாவட்ட மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் அனிஷின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், அவருடைய உடலை குமரி மாவட்டத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக்கோரியும் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

0 Comments: