Manavai News
மணவாளக்குறிச்சியில் பரபரப்பு: போதையில் நிர்வாணமாக நின்று தகராறு செய்த வாலிபர் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய டீக்கடைக்காரர்
மணவாளக்குறிச்சியில் பரபரப்பு: போதையில் நிர்வாணமாக நின்று தகராறு செய்த வாலிபர் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய டீக்கடைக்காரர்
26-07-2015
மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள பெரியவிளை ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 49). அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஸ்டாலின் (வயது 34) என்பவர் அடிக்கடி டீக்குடிக்க வருவார். சிலநேரங்களில் அவர் போதையில் அங்கு சென்று சுரேசுடன் தகராறில் ஈடுபடுவார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடக்கும். சம்பவத்தன்று இதுபோல் தகராறு ஏற்பட்டது. இதில் போதையில் இருந்த வாலிபர் ஸ்டாலின் திடீரென தனது உடைகளை களைந்து நிர்வாணமாக நின்று சத்தம் போட்டார்.
இதை சுரேஷ் தட்டிக்கேட்டும் அவர் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், டீக்கடையில் அடுப்பில் கொதித்து கொண்டிருந்த சுடுநீரை எடுத்து வாலிபரின் மர்ம உறுப்பில் ஊற்றியதாக தெரிகிறது. இதனால் வலி தாங்கமுடியாமல் ஸ்டாலின் துடித்தார்.
உடனே அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி ஸ்டாலின் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குபதிவு செய்து டீக்கடை உரிமையாளர் சுரேஷை கைது செய்தனர். இதுகுறித்து சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments: