சுற்றுவட்டார செய்திகள்
மணவாளக்குறிச்சியில் இருந்து திங்கநகர் சென்ற அரசு பேருந்து கட்டுபாட்டை இழந்து வீட்டு சுவரில் மோதியது
மணவாளக்குறிச்சியில் இருந்து திங்கநகர் சென்ற அரசு பேருந்து கட்டுபாட்டை இழந்து வீட்டு சுவரில் மோதியது
25-06-2015
மணவாளக்குறிச்சியில் இருந்து திங்கள்நகர் நோக்கி நேற்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. காலை நேரம் என்பதால் அந்த பேருந்தில் அதிக அளவில் மாணவ–மாணவிகள் பயணம் செய்தனர். மேலும் வேலைக்குச் செல்பவர்கள், பெண்கள் என்று ஏராளமான பயணிகள் நிரம்பி வழிந்தனர். அந்த பஸ் நேற்று காலை 9 மணி அளவில் திங்கள்நகர் அருகே உள்ள மாங்குழி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென அந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதைப் பார்த்ததும் பஸ்சில் இருந்த மாணவ–மாணவிகளும், பயணிகளும் பயத்தில் அலறினார்கள். இதைப் பார்த்ததும் அந்த வழியாக சாலையில் நடந்து சென்ற பொதுமக்களும் விலகி ஓடினார்கள்.
சிறிது தூரம் தாறுமாறாக ஓடிய அந்த பஸ் அந்த பகுதியில் சாலையோரத்தில் இருந்த ஒரு வீட்டு காம்பவுண்டு சுவர் மீது மோதி நின்றது.
உடனடியாக பஸ்சில் இருந்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள். இந்த விபத்தில் அந்த காம்பவுண்டு சுவர் இடிந்தது. பஸ்சும் பலத்த சேதம் அடைந்தது. அதிர்ஷ்ட வசமாக பஸ்சில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர். சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அந்த சாலை குறுகலானது என்பதால் இந்த விபத்து காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் நீண்ட வரிசையில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிற்கும் நிலை ஏற்பட்டது. விபத்துக்குள்ளான பஸ்சில் பயணம் செய்தவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று திங்கள்நகர் பஸ் நிலையத்தில் இருந்து வேறு பஸ் ஏறி சென்றனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று பஸ்சை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
0 Comments: