
District News
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளையும் பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றும்: பொன்.ராதாகிருஷ்ணன்
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளையும் பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றும்: பொன்.ராதாகிருஷ்ணன்
01-06-2015
தக்கலை அண்ணா சிலை முன்பு குமரி மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் குமரி ரமேஷ் முன்னிலை வகித்தார். பத்மநாபபுரம் நகர தலைவர் உண்ணிகிருஷ்ணன் வரவேற்றார்.
கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சி ஊழல் நிறைந்து காணப்பட்டது. 1969ல் இந்திரா காந்தி ஆட்சியில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது. இதனால் மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் 1969க்கு பின்பு 2014 வரை வங்கியின் பயன் சாதாரண மக்களை சென்றடையவில்லை.
நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு புதிய வங்கி கணக்கு திட்டத்தை அறிவித்தார். இதில் 15 கோடி பேர் இணைந்து உள்ளனர். மோடியின் வங்கி கணக்கு திட்டம், விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு, பென்சன் திட்டங்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. வியாபாரிகளை கந்து வட்டி கும்பலிடம் இருந்து மீட்க முத்ரா வங்கி திட்டம் வர உள்ளது. ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தின் மூலம் நகர பகுதிகளில் 4 கோடி மக்களும், கிராமங்களில் 2 கோடி மக்களும் பயன் பெறுவார்கள். எனது துறை மூலம் துறைமுகங்கள் புதியதாக உருவாக்கப்பட உள்ளது.
சென்னை துறைமுகம் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இந்த ஆண்டில் ரூ.5 கோடி லாபம் ஈட்டி உள்ளது. குளச்சல் துறைமுகத்தை மேம்படுத்த முடியுமா? முடியாதா? என்பது 15 நாட்களில் தெரிந்து விடும். குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைக்க 400 ஏக்கர் இடம் தேவை. இது தொடர்பாக மாநில அரசுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கோப்பு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் 80 நகரங்களில் பெண் குழந்தைகளே பிறக்கவில்லை. இதற்கு காரணம் பெண் சிசு கொலையாகும். பெண் குழந்தைகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
தமிழக அரசு இலவசம் மூலம் ஏழை மக்களை ஏமாற்றி வருகிறது. மது மூலம் மக்களை அடிமைப்படுத்துகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. 2016 சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும். குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளையும் பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் எம்.ஆர்.காந்தி, விஜயராகவன், தர்மராஜ், தக்கலை ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ரவிக்குமார், ஒன்றிய பொதுச்செயலாளர் கோபால கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் டாக்டர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments: