
குமரிமாவட்ட செய்திகள்
நாகர்கோவிலில் திறக்கப்பட்ட அம்மா உணவகங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
நாகர்கோவிலில் திறக்கப்பட்ட அம்மா உணவகங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
25-05-2015
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் உணவு பசியை போக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா அம்மா உணவகங்களை திறந்தார். மாநகராட்சி பகுதிகளில் தொடங்கப்பட்ட இந்த திட்டம்,தற்போது நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தபட்டது.
அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகம், குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம் ஆகிய பகுதிகளில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டன.
இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இந்த உணவகங்களில் காலையில் இட்லியும், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவையும் விற்கப்படும்.
இட்லி ரூ.1–க்கும், தயிர் சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5–க்கும் விற்கப்படுகிறது. உணவகங்கள் தினமும் காலை 7 மணி முதல் 10 மணிவரையிலும், பகல் 12.30 மணி முதல் 3 மணி வரையிலும் திறந்து இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இன்று காலை முதல் இந்த உணவகங்களில் உணவு பொருட்கள் விற்பனை தொடங்கியது. இன்று காலையிலேயே உணவகங்கள் முன்பு ஏழை மற்றும் தொழிலாளிகள், பெண்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அவர்கள் காலை 7 மணிக்கு உணவகம் திறந்ததும் முண்டியடித்து சென்று இட்லி, சட்னி மற்றும் சாம்பார் ஆகியவற்றை வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்திலும், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி உணவகத்திலும் ஏராளமானோர் இட்லி வாங்க காத்திருந்தனர். இதனால் இந்த உணவகங்களில் விற்பனை ஆரம்பமான சிறிது நேரத்திலேயே அனைத்து உணவு பொருட்களும் விற்று தீர்ந்தது.
வாங்கி சென்ற மக்கள் அவை அனைத்தும் நல்ல தரமாகவும், சுவையாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.
0 Comments: