
சுற்றுவட்டார செய்திகள்
முட்டத்தில் கடல் அலையில் சிக்கி, பாதிரியாருக்கு படித்து வந்தவர் சாவு
முட்டத்தில் கடல் அலையில் சிக்கி, பாதிரியாருக்கு படித்து வந்தவர் சாவு
09-05-2015
கொல்லங்கோடு அருகே உள்ள அனுகோடை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகன் ரிக்சன் ஜோஸ் (வயது 25). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள இறையியல் கல்லூரியில் பாதிரியாருக்கு படித்து வந்தார். நேற்று மார்த்தாண்டம் அருகே உள்ள வேதாகமபள்ளியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் ரிக்சன் ஜோஸ் உள்பட 55 பேர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் வாகனத்தில் குளச்சல் கடற்கரைக்கு சென்று, இயற்கை அழகை ரசித்தனர். அதைத்தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் முட்டத்துக்கு சென்றனர். அங்கு அலை எழும்பும் அழகை அவர்கள் ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது ஒரு பெரிய அலை வந்தது. அது கண் இமைக்கும் நேரத்தில் ரிக்சன் ஜோசை இழுத்து சென்றது. உடனே அவருடன் சென்றவர்கள் ரிக்சன் ஜோசை காப்பாற்றும்படி கூச்சல் போட்டனர்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சென்ற மீனவர்கள் கடலில் இறங்கி ரிக்சன் ஜோசை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை, உடனே மூங்கில்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரிக்சன் ஜோஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி குளச்சல் கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து, ரிக்சன் ஜோஸ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments: