
Manavai News
மணவாளக்குறிச்சி பகுதியில் விடிய, விடிய பெய்து வரும் கனமழை: பெரியகுளம் ஏலா வெள்ளத்தில் மூழ்கியது
மணவாளக்குறிச்சி பகுதியில் விடிய, விடிய பெய்து வரும் கனமழை: பெரியகுளம் ஏலா வெள்ளத்தில் மூழ்கியது
18-05-2015
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் காலை முதலே மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டத் துவங்கியது.
நாகர்கோவிலிலும் பலத்த மழை பெய்தது. இரவும் இடை விடாது விடிய விடிய மழை பெய்ததால் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டார் சாலை, செம்மாங்குடி ரோடுகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இதேபோல், மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களுக்கு முன்பிருந்து அடைமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ரோடுகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். மழையுடன் பலத்த காற்றும் வீசியது.
![]() |
கடல் போல் காட்சியளிக்கும் பெரியகுளம் ஏலா |
இந்நிலையில் மணவாளக்குறிச்சி பெரியகுளம் ஏலா வயல்வெளி பகுதி மழை நீரால் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. திருநயினார்குறிச்சி செல்லும் சாலை முற்றிலும் மூழ்கியது. இன்று காலையில் மழை சற்று குறைந்து சூரியன் எட்டிப் பார்த்தது. மதியத்தில் இருந்து மீண்டும் மழை கொட்டத் துவங்கியது. தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அவ்வப்போது மின்சாரம் தடைபட்டு காணப்படுகிறது.
0 Comments: