
குமரிமாவட்ட செய்திகள்
குமரி மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்
குமரி மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகள்
08-05-2015
பிளஸ்–2 தேர்வில் குமரி மாவட்ட அளவில் நாகர்கோவில் அல்போன்சா பள்ளி மாணவி சீசல் லிஸ்டின் 1186 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். இவரது சொந்த ஊர் நாகர்கோவில் மேலமறவன் குடியிருப்பு. இவரது தந்தை ரசலையன். தாய் மேரி லதா ஏஞ்சல். பெற்றோர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். இங்கு சித்தி, சித்தப்பா பராமரிப்பில் சீசல் லிஸ்டின் படித்து வந்தார்.
மாவட்ட அளவில் முதலிடம் பெற்றது குறித்து மாணவி சீசல் லிஸ்டின் கூறியதாவது:– நான் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படித்து வந்தேன். 10–ம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண் எடுத்ததால் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் படித்தேன். பள்ளி தேர்வுகளில் 2–வது மதிப்பெண் எடுத்து வந்தாலும் இறுதி தேர்வில் மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் முதலிடம் கிடைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்பது ஆசை. எனவே டாக்டருக்கு படிப்பேன். எனது பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எந்த நேரத்திலும் பாடம் சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து வைத்து எங்களுக்கு உதவியாக இருந்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
2–ம் இடத்தை அல்போன்சா பள்ளி மாணவி ஷாமினி பிடித்தார். அவர் 1183 மதிப்பெண்கள் பெற்றார். இவரது தந்தை பெயர் கணேஷ். கேரள மாநிலத்தில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் பிரேம குமாரி. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
மாணவி ஷாமினி கூறியதாவது:– எனது பெற்றோர் பணி காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்கள். இதனால் தாத்தா, பாட்டி படிப்புக்கு அதிக உதவியாக இருந்தனர். எனக்கு எனது தாயாரை போல் மகப்பேறு டாக்டராக ஆசை. வகுப்பில் முதலிடம் பெற்று வந்த எனக்கு இப்போது மாவட்ட அளவில் 2–ம் கிடைத்துள்ளது வருத்தத்தை கொடுத்தாலும் இதுவும் எனக்கு மகிழ்ச்சியே. நான் அதிகம் டி.வி. பார்க்க மாட்டேன். படிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். டாக்டர் படிப்பை முடித்தபிறகு ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்பது எனது லட்சியம்.
3–வது இடத்தை அல்போன்சா பள்ளி மாணவி சிவசங்கரி பிடித்தார். இவர் 1181 மதிப்பெண்கள் பெற்றார். இவரது சொந்த ஊர் கொட்டாரம் சுந்தபுரம் ஆகும். தந்தை முருகன் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். தாயார் நிர்மலா கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மாணவி சிவசங்கரி கூறியதாவது:– எனது சகோதரி எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். எனவே நானும் அதுபோல எம்.பி.பி.எஸ். படித்து டாக்டர் ஆவேன். மருத்துவ படிப்பு மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். எனது படிப்புக்கு தாய், தந்தையர் மற்றும் ஆசிரியர்கள் அதிக ஊக்கம் அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார். குமரி மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை அல்போன்சா பள்ளி பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments: