குமரிமாவட்ட செய்திகள்
குமரி மாவட்டத்தில் திறந்தநிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் கலெக்டர் உத்தரவு
குமரி மாவட்டத்தில் திறந்தநிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் கலெக்டர் உத்தரவு
28-05-2015
குமரி மாவட்டத்தில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– குமரி மாவட்டத்தில் புதியகிணறுகள், திறந்தவெளிகிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள், ஆழ்குழாய்கிணறுகள் மற்றும் தோண்டப்பட்ட கிணறுகள், தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மீண்டும் தோண்டுவது, ஏற்கனவே உள்ள கிணறுகளை ஆழப்படுத்துவது போன்ற புனரமைப்பு பணிக்கு அரசு புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி புதிய கிணறு தோண்டவும், மேற்குறிப்பிட்ட கிணறுகளை பராமரிக்கவும், ரூ.5 ஆயிரம் செலுத்தி அதற்கென அரசால் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் ஊராட்சி மன்ற தலைவரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கிணறு தோண்டும் மற்றும் பராமரிக்கும் பணிகளை ரூ.15 ஆயிரம் செலுத்தி அதற்கான படிவத்தில் விண்ணப்பித்து அனுமதிக்கப்பட்ட பதிவு சான்று பெற்ற நபர்களை கொண்டு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். வீட்டு உபயோகத்திற்காக அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகளுக்கு கட்டணம் செலுத்தவோ, அனுமதி பெறவோ அவசியம் இல்லை.
மேலும் திறந்த நிலையில் உள்ள கிணறுகள், கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர்கள், பணி மேற்பார்வையாளர், கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர்களை ஈடுபடுத்தி கிணறுகளை பட்டியலிட்டு, அதனை 15 நாட்களுக்குள் மூடி போட்டு மூடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கிணறுகளை ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
கணக்கெடுப்பு முடிவுற்ற பின் 1–6–2015 முதல் 15–6–2015 ஆகிய 15 நாட்களுக்குள் மேற்குறிப்பிட்ட கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிணறுகளை பாதுகாப்பாக மூடுதல் தொடர்பான அனைத்து பணிகளும் 15–6–2015–க்குள் கட்டாயமாக முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.





0 Comments: