சுற்றுவட்டார செய்திகள்
குளச்சலில் பலத்த மழை எதிரொலி: பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
குளச்சலில் பலத்த மழை எதிரொலி: பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
19-05-2015
குளச்சலில் பெய்த பலத்தமழையின் காரணமாக செங்கல்சூளைகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் செங்கல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் வள்ளம், கட்டுமரங்களை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
லட்சத்தீவு மற்றும் கேரளா பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக, குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குளச்சல் பகுதியில் நேற்று முன்தினம் மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக குளச்சல் தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையாகுளம் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளது. இந்த மழை வெள்ளம் செங்கல்சூளையை சூழ்ந்து உள்ளது.
இதனால் செங்கல் தயாரிப்பு தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. தயார் செய்து வைத்திருக்கும் செங்கல்களும் சேதமாகியுள்ளது. இதனால் செங்கல்சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குளச்சல் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கட்டுமரங்கள், வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறார்கள். கன மழையினால் குளச்சல் பகுதியில் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. நடுக்கடலில் விசைப்படகில் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்கள் நேற்று காலை கரை திரும்பினர். கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் கட்டுமரங்கள், வள்ளங்களில் குறைவான மீனவர்களே மீன்பிடிக்க சென்றனர். பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது கட்டுமரங்கள், வள்ளங்களை கடற்கரையோரம் நிறுத்தியிருந்தனர்.
கரை திரும்பிய மீனவர்கள் குளச்சல் மார்க்கெட்டிற்கு மீன்களை விற்பதற்காக கொண்டு வந்தனர். அங்கு குறைந்த அளவிலே மீன்கள் விற்பனைக்காக வந்திருந்ததால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் நேற்று மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.




0 Comments: