
Events
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
28-02-2015
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலை பெண்களின் சபரிமலை என்றும் அழைப்பது வழக்கம். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டு மாசித்திருவிழா மார்ச் 1-ம் தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
நாளை காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6.30 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருவிழா கொடியேற்றப்படுகிறது. இதில் இடைக்கோடு தந்திரி மகாதேவரு அய்யர் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தி கொடியேற்றுகிறார். 1-ம் தேதி காலை 9 மணிக்கு மாநாடு கொடியேற்று விழா நடக்கிறது. ஹைந்தவ இந்து சேவா சங்க தலைவர் கந்தப்பன் கொடியேற்றுகிறார். காலை 9.15 மணிக்கு சமய மாநாடு தொடங்குகிறது. தலைவர் கந்தப்பன் தலைமை தாங்க, பொதுச்செயலாளர் ரெத்தின பாண்டியன், செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். திருவனந்தபுரம் ஸ்ரீமத்சாமி ஆப்தலோகானந்தஜி மகராஜ் மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

தமிழக பா.ஜனதா கட்சி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசுகிறார். இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் காமராஜ், கேரள மந்திரி சிவகுமார், குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதில் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், சுவாமி கருணானந்தஜி மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்குகிறார்கள். பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், 2 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு ராஜராஜேஸ்வரி பூஜையும், அதைத்தொடர்ந்து 3,006 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது,
6-வது நாள் திருவிழாவன்று இரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்ற மகாபூஜை நடக்கிறது. இந்த பூஜை ஆண்டில் 3 முறை நடைபெறும். மாசித்திருவிழா 6-ம் நாளிலும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்றும், மீன பரணிக்கொடைவிழாவன்றும் நடைபெறும். 9-வது நாள் திருவிழாவன்று பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடைபெறுகிறது. 10-வது நாள் திருவிழாவன்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களபபவனி எடுத்து வரப்படுகிறது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருகிறார். 4.30 மணிக்கு அடியாந்திர பூஜை, குத்தியோட்டம் போன்றவை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருகிறார். நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடைபெறுகிறது. இதை காண தமிழகம் மற்றும் கேரளவை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
0 Comments: