
குமரிமாவட்ட செய்திகள்
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே பாலம்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே பாலம்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
13-01-2015
கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தை காண சுற்றுலா பயணிகள் ஏராளமாக படகில் செல்கிறார்கள். அந்த படகு, பயணிகளை விவேகானந்தர் மண்டபத்தில் இறக்கி விட்டதும், அங்கு ஏற்கனவே காத்திருக்கும் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளுவர் சிலையை காண அழைத்து செல்கிறார்கள். மேலும், இயற்கை சீற்றத்தின் காரணமாக சில நேரங்களில் விவேகானந்தர் பாறை வரை மட்டுமே படகு இயக்கப்படும்.
ஆகவே விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைத்தால், விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து முடித்ததும், அந்த பாலம் வழியாக சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியும். படகுக்காக காத்து இருக்க வேண்டியது இருக்காது என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் திருப்பயணம் தொடக்க விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசும் போது கூறியதாவது:- கன்னியாகுமரியில் கடல் நடுவே திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த சிலைக்கு செல்ல பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.
இன்றும் கூட திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு செல்ல முடியாத அளவுக்கு இயற்கை இடையூறு ஏற்பட்டது. விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே ஒரு பாறை உள்ளது. அந்த பாறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதன் மீது விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் இணைத்து பாலம் அமைக்கலாம். அதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கும் பட்சத்தில் அந்த பாலம் விரைவில் கட்டப்படும். இதற்கான நிதியை பற்றி பிரச்சினை இல்லை. இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
0 Comments: