
குமரிமாவட்ட செய்திகள்
குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை களை கட்டியது
குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை களை கட்டியது
13-01-2015
தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை தமிழக மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை 15- ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடுகிறார்கள். அதற்கு முந்தைய நாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் கொண்டாட்ட ஏற்பாடுகள் இப்போதே ரெடியாகிவிட்டன.
குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின் வெளிப்பாடுகள் ஆங்காங்கே தென்பட தொடங்கி விட்டன. பொதுமக்களில் பலர் வீடுகளை வெள்ளை அடித்து வர்ணம் பூசுவதில் ஈடுபட்டுள்ளனர். தாய்மார்கள் தங்கள் மகள்களுக்கு பொங்கல்படி கொடுக்க தொடங்கி விட்டனர். இதனால் கிராமங்களில் ஆட்டோக்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
பொங்கலுக்கு தேவையான கரும்புகள் குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் குவிக்கப்பட்டு உள்ளன. நாகர்கோவிலில் முக்கியமான சந்திப்புகளில் கரும்பு வியாபாரம் களை கட்டியுள்ளது. இதைப்போல பொங்கல் மண்பானை விற்பனையும் சூடு பிடித்துள்ளது. பெரும்பாலானோர் தங்களது வீட்டின் முற்றத்தில் தற்காலிக அடுப்புகூட்டி பொங்கலிடுவது வழக்கம். இதற்காக பனை ஓலைகளை பயன்படுத்துவார்கள்.
இதை அறிந்து வியாபாரிகள் பலர் பனை ஓலைகளை கட்டு கட்டாக நேற்று நாகர்கோவிலில் பல இடங்களில் இறக்கி வியாபாரத்துக்கு வைத்துள்ளனர். மேலும் காய்கறி சந்தைகளில் பொங்கல் காய்கறிகள், மஞ்சள் குலைகள் அதிகளவில் இறக்கி வைக்கப்பட்டு வியாபாரம் ஜரூராக நடந்து வருகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை களை கட்டத் தொடங்கி விட்டது.
0 Comments: