குமரிமாவட்ட செய்திகள்
கத்தார் நாட்டில் இருந்து ஊருக்கு புறப்பட்ட குமரி மீனவர் விமானத்தில் சாவு வரவேற்க காத்திருந்த உறவினர்கள் கதறல்
கத்தார் நாட்டில் இருந்து ஊருக்கு புறப்பட்ட குமரி மீனவர் விமானத்தில் சாவு வரவேற்க காத்திருந்த உறவினர்கள் கதறல்
06-12-2014
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தை சேர்ந்தவர் சகாயவிங் (வயது 36), மீனவர். இவர் கடந்த 2012–ம் ஆண்டு கத்தார் நாட்டுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவர்அங்கிருந்து ஊர் திரும்ப முடிவு செய்தார். அவர் கத்தாரில் இருந்து விமானம் மூலம் ஊர் திரும்ப இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
எனவே அவர்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்று சகாயவிங் வரும் விமானத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த விமானம் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி வந்தனர். ஆனால் சகாயவிங் மட்டும் வெளியே வரவில்லை.
இதனால் பதறிபோன உறவினர்கள் விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது சகாயவிங் ஊருக்கு புறப்பட்டு வந்த விமானத்திலேயே இறந்தது தெரிய வந்தது. சகாய விங் வந்த விமானம் கத்தாரில் இருந்து துபாய் வழியாக திருவனந்தபுரம் வரும் விமானம் ஆகும். அந்த விமானம் துபாயில் இருந்து புறப்படும் போதே சகாயவிங் விமான இருக்கையிலேயே இறந்து போனது தெரிய வந்தது. எனவே விமான ஊழியர்கள், சகாயவிங் உடலை துபாய் நாட்டு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி விட்டு வந்தனர் என்பது தெரிய வந்தது.
இந்த தகவலை அறிந்த சகாய விங்கின் உறவினர்கள் விமான நிலையம் முன்பு கதறி அழுதனர். பின்னர் அவர்கள் விமான நிலைய அதிகாரிகளிடம், சகாய விங்கின் உடலை ஊருக்கு கொண்டு வருவது பற்றி கேட்டனர். அப்போது அவர்கள் இனி இந்திய தூதரகம் மூலம் முயற்சி செய்து உடலை ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தினர். இதனால் மீனவர் சகாயவிங் குடும்பத்தினர் சோகத்தில் முழ்கினார்கள். மீனவர் சகாயவிங்குக்கு திருமணமாகி அஜந்தா மேரி சுதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
0 Comments: